விமானத்தை வீழ்த்த முயன்ற இணை விமானி – தாக்குதலை முறியடித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதான விமானி
Meiveli Media Team

துபாயிலிருந்து டெல் அவீவ் நோக்கிப் பயணித்த Flydubai FZ1073 விமானத்தில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 174 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, விமானம் சுமார் 33 ஆயிரம் அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, விமானத்தின் இணை விமானி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதான விமானி கெப்டன் ஸ்மித் மச்சார் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலையடுத்து விமானம் திடீரென வேகமாகக் கீழ்நோக்கிச் சென்றதுடன், சுமார் 14 ஆயிரம் அடி உயரம் 30 விநாடிகளுக்குள் குறைந்ததாக விமானப் பயணத் தரவுகள் தெரிவிக்கின்றன. நிலைமை மோசமடைந்த நிலையில், காயமடைந்திருந்த பிரதான விமானி காக்பிட் கதவைத் திறக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விமானப் பணியாளர்கள் மற்றும் சில பயணிகள் காக்பிட்டுக்குள் நுழைந்து, தாக்குதல் நடத்திய இணை விமானியை கட்டுப்படுத்தியுள்ளனர். விமானத்தில் பயணிகளாக இருந்த இரண்டு Flydubai விமானிகளும் கட்டுப்பாட்டை ஏற்று, விமானத்தை சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கியுள்ளனர். விமானத்தில் இருந்த பெரும்பாலானோர் இஸ்ரேலியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் மாற்று விமானம் மூலம் அவர்கள் டெல் அவீவ் சென்றடைந்துள்ளனர்.
இதேவேளை, தாக்குதல் நடத்திய இணை விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள போதிலும், அவரது நோக்கம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன. இந்த சம்பவத்தில் பிரதான விமானி உட்பட சிலர் காயமடைந்ததாகவும், சவூதி அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இணை விமானியை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெரும் ஆபத்திலிருந்து பயணிகளை காப்பாற்றிய விமானி, பணியாளர்கள் மற்றும் பயணிகளின் நடவடிக்கையை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். இந்த சம்பவம் விமானப் பாதுகாப்பு தொடர்பான புதிய கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், விமானி ஒருவரின் பின்னணி மற்றும் தாக்குதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

