பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய யோசனை – பிரான்ஸ், ஸ்பெயின் வரவேற்பு

Meiveli Media Team

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்ற பிரதமர் ஆண்டி பர்னமின் கருத்துக்கு, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஸ்பெயினுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர். பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பினால், அதனை வரவேற்கத் தயாராக இருப்பதாக பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார். அதேவேளை, மக்ரோன், பிரித்தானியா மீண்டும் ஒன்றியத்தை நோக்கி நகர்வது தனது நாட்டுக்கும் ஐரோப்பாவுக்கும் நல்ல செய்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ஆண்டி பர்னம், பிரித்தானியாவின் நீண்டகால ஐரோப்பிய உறவு தொடர்பில் பல்வேறு தெரிவுகளை ஆராய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதில் தற்போதைய உறவைத் தொடர்வது, சுங்க ஒன்றியத்துடன் மீண்டும் இணைவது, ஐரோப்பிய ஒற்றைச் சந்தையில் இணைவது அல்லது முழுமையான ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை மீண்டும் பெறுவது உள்ளிட்ட வாய்ப்புகள் ஆராயப்படலாம் என அவர் கூறியுள்ளார். இதேவேளை, சீனாவுடனான வர்த்தகப் போட்டியை எதிர்கொள்ள ஐரோப்பா தனது வர்த்தகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் மக்ரோனும் சான்செஸும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றிய உறவு தொடர்பான அடுத்த கட்ட விவாதங்கள், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டை முன்னிட்டு தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.