மண்டபம் முகாமில் இலங்கைத் தமிழர் ஒருவர் மீது காலணி வீச்சு:  ஆணையர் சதீஷ் நேரில் சென்று கள ஆய்வு

Meiveli Media Team


இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில்,  இலங்கைத் தமிழர் ஒருவர் மீது காலணி வீசப்பட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு ஆணையர் சதீஷ் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை மாலை முகாமுக்குச் சென்ற ஆணையர், அங்கு வசிக்கும் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் தொடர்பான கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளார். இதன்போது, அண்மைக்காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்த சிலர், மீண்டும் தமது சொந்த நாடான இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்து ஆணையரிடம் மனுக்களையும் கையளித்துள்ளனர். அதேவேளை, முகாமில் வசிக்கும் மக்கள் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் தங்களது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதிலும், அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதிலும் சிரமங்கள் ஏற்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால், தங்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்குவதுடன், முகாமில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நீண்டகாலமாக முகாமில் வசிப்பவர்களுக்கு சிறப்புத் தணிக்கை மற்றும் விடுமுறை தொடர்பான நடைமுறைகளில் விலக்கு வழங்க வேண்டும், சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இலங்கைத் தமிழர் ஒருவர் மீது காலணி வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து முதற்கட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">