சவூதி அரேபிய மன்னரிடம் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞருக்கு மன்னிப்பு கோரும் வண. பானகல உபதிஸ்ஸ நாயக்க தேரர்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த 24 வயதுடைய சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞருக்குக் கருணை அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்குமாறு, சவூதி அரேபிய நாட்டின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத் அவர்களிடம் இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவரும் ஜப்பான் மற்றும் இந்தியாவின் பிரதான சங்கநாயக்கருமான வணக்கத்திற்குரிய பானகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ வேண்டுகோள் கடிதம் கொழும்பிலுள்ள இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்-கஹ்தானி ஊடாக சவூதி மன்னருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, இந்திய சாஞ்சி சேதியகிரி விகாரையின் பொறுப்பதிகாரியும் மகாபோதி மையத்தின் தலைவருமான வண. பானகல விமலதிஸ்ஸ தேரர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

சவூதி அரேபிய வரலாற்றில் அந்நாட்டிற்கு விஜயம் செய்த முதலாவது பௌத்த துறவி என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பின்னணியைக் கொண்ட வண. பானகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் ரியாத்தில் நடைபெற்ற உலக முஸ்லிம் லீக் அமைப்பின் சர்வதேச மாநாட்டில் பௌத்த பிரதிநிதியாக இவர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

125 ஆண்டுகள் பழமைவாய்ந்த இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவராகவும், ஜப்பானின் சவரா லங்கா ஜீ விகாரையின் நிறுவுநராகவும், யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமும் இந்திய 200 ரூபாய் தாளில் பொறிக்கப்பட்டதுமான சாஞ்சி சேதியகிரி விகாரையின் அதிபதியாகவும் சேவையாற்றும் தேரர், அனைத்து இலங்கை மக்களின் சார்பில் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மன்னருக்கு அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில், கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான இலங்கை மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் சவூதி அரேபிய அரசு வழங்கி வரும் பங்களிப்பிற்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வேலைவாய்ப்பிற்காகச் சென்ற கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்ற இளைஞர், போதிய சமூக மற்றும் சமய முதிர்ச்சியின்மை காரணமாகத் தீர விசாரிக்காமல் செய்த தவறுக்காகவே அம்மாநில நீதிமன்றத்தால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும், அத்தவறைக் கருணை உள்ளத்தோடு பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்கி தண்டனையிலிருந்து விடுவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜப்பான் சவரா லங்கா ஜீ விகாரையைச் சேர்ந்த வண. கொஸ்வத்தே பாலித தேரர் மற்றும் இந்திய சாஞ்சி சேதியகிரி விகாரையைச் சேர்ந்த வண. பானகல விமலதிஸ்ஸ தேரர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.