புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு (NCF) குறித்து மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்று அண்மையில் இசுருபாயவிலுள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு (NCF) குறித்து மாகாண மற்றும் வலய மட்டத்திலான கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதே இந்நிகழ்ச்சியின் முதன்மை நோக்கமாகும்.

புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு அமைவாக, தேசிய கல்வி ஆணைக்குழுவின் வழிகாட்டலின் கீழ் தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு (NCF) பற்றிய விரிவான தகவல்கள் இங்கு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்ட பின்னர், ஆவணங்கள் எதிர்காலத்தில் கல்வி அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என்றும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.

தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பிற்கு (NCF) அமைவாக, மு.ப. 7.30 முதல் பி.ப. 1.30 வரையிலான பாடசாலை நேரத்தில் ஒரு பாடவேளையை 40 நிமிடங்களாகக் கட்டுப்படுத்துதல், அழகியல் மற்றும் வரலாறு உள்ளிட்ட க.பொ.த. சாதாரண தரத்திற்கு முன்வைக்கப்படும் பாடங்களின் எண்ணிக்கை மற்றும் மதிப்பீட்டு முறையில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து இங்கு தெளிவுபடுத்தப்பட்டது. மேலும், 10-11 ஆம் தரங்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள தொழிற்பாடங்கள் மற்றும் 12-13 ஆம் தரங்களுக்காக சமூக நல்லிணக்கம், சட்டம், ஒழுக்கவியல், தொழில் வழிகாட்டல் மற்றும் வெளிநாட்டு மொழிகள் போன்ற கலைத்திட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பாடப் புலங்கள் குறித்தும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தவிர, புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாடசாலை உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் அபிவிருத்தித் திட்டங்கள், மாகாண மட்டத்தில் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் உள்ளிட்ட தொகுதி (Module) தயாரிப்பு மற்றும் விநியோகப் பணிகள் குறித்தும், 2027 ஆம் ஆண்டிற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் வருகை தந்திருந்தவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க களுவெவ அவர்கள், புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகளுக்குரிய கொள்கைத் தீர்மானங்கள், அதன் முக்கிய தூண்களை உள்ளடக்கும் வகையில் செயற்படும் தேசிய செயல்பாட்டுக் குழுவின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், 2027 ஆம் ஆண்டில் இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டை மேலும் பரந்தளவில் நடைமுறைப்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

புதிய கல்விச் சீர்திருத்தத் திட்டங்கள் குறித்து மாகாண மற்றும் வலய மட்டத்தில் அதிபர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பங்காளிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், மாகாண மற்றும் வலயக் கல்விக்கூட்டங்களில் தொடர்புடைய தரப்பினருக்கு விழிப்புணர்வூட்டுவதற்குத் தேவையான வழிகாட்டலையும் புரிதலையும் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்குவது கல்வி அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு மேலதிகமாக, தேசிய கல்வி ஆணைக்குழுவின் (NEC) வழிகாட்டலின் கீழ் தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்ட தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு (NCF) உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்த பின்னர் கல்வி அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டார, கல்விச் சீர்திருத்தங்கள் பற்றிய ஆலோசகர் பேராசிரியர் பிரியங்கனி சேனானாயக்க உள்ளிட்ட கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகம், மேலதிக செயலாளர்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.