காவல்துறைக்கு கேமரா வாங்கும் டெண்டரில் பெருமளவிலான முறைகேடு: மக்கள் போராட்ட இயக்கம் குற்றச்சாட்டு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

இலங்கை காவல்துறையினருக்காக பாடி கேமராக்கள் (Body Cams) மற்றும் டாக்கிங் ஸ்டேஷன்களை (Docking Stations) கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடைமுறையில் பெருமளவிலான முறைகேடுகளும் தொழில்நுட்பக் குளறுபடிகளும் இடம்பெற்றுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த முதலிகே குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் அவர் நடத்திய ஊடகச் சந்திப்பில் தெரிவித்த தகவல்களின்படி, இலங்கை காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தேவையான 500 பாடி கேமராக்கள் மற்றும் 70 டாக்கிங் ஸ்டேஷன்களைக் கொள்முதல் செய்வதற்காக இவ்வருட மார்ச் மாதம் டெண்டர் கோரப்பட்டது.
காவல்துறையினரின் அன்றாட நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்வதன் மூலம் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்கு இத்தகைய தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது என்பதால், கொள்கையளவில் இத்திட்டம் வரவேற்புக்குரியது என சுட்டிக்காட்டிய வசந்த முதலிகே, ஆனால் இதற்காக பின்பற்றப்படும் டெண்டர் நடைமுறையே பெரும் கேள்விகளுக்கு உள்ளாகியுள்ளது என்றார்.
குறிப்பாக, இம்மாபெரும் திட்டத்திற்கான தேவைகள் மற்றும் விவரக்கூற்றுகள் அடங்கிய TOR அறிக்கையானது தகுதிவாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் அல்லது பல்கலைக்கழக பேராசிரியர்களால் தயாரிக்கப்படவில்லை.
மாறாக, ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதில் வந்த பதில்களைக் அப்படியே ‘காப்பி-பேஸ்ட்’ செய்து இம்மாபெரும் திட்டத்திற்கான அரசாங்க ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு மற்றும் மக்கள் பணத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான விஷயத்தில், எந்தவித பொறுப்புணர்வும் இன்றி இத்தகைய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த முறையற்ற வழிகாட்டுதல்களின் காரணமாக, டெண்டருக்காக விண்ணப்பித்துள்ள 24 நிறுவனங்களின் ஏலத் தொகைகளில் பெருமளவிலான முரண்பாடுகள் காணப்படுகின்றன. குறைந்தபட்ச ஏலத் தொகையாக ஒரு நிறுவனம் ரூ. 5 கோடியைக் குறிப்பிட்டுள்ள நிலையில், மற்றொரு நிறுவனம் ரூ. 36 கோடியைக் கோரியுள்ளது.
மேலும், அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனம் ரூ. 17 கோடியைக் குறிப்பிட்டுள்ள நிலையில், அதன் கீழ் இயங்கும் மொபிடெல் நிறுவனம் ரூ. 6 கோடியைக் குறிப்பிட்டுள்ளது.
முறையான தொழில்நுட்ப வரம்புகள் நிர்ணயிக்கப்படாததால் தான் ஒரே பொருளுக்கு 7 மடங்குக்கும் மேல் விலை வித்தியாசம் உருவாகியுள்ளது.
மேலும், இத்திட்டத்தில் நலமுரண் சார்ந்த பிரச்சனைகளும் எழுந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
தற்போது அரசாங்கத்தின் டிஜிட்டல் ஆலோசகராகப் பணியாற்றும் நபர், முன்னதாக டயலாக் நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்தவர் என்பதும், தற்போது அதே டயலாக் நிறுவனம் இந்த டெண்டருக்கு விண்ணப்பித்துள்ளதும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அரசுக்கு நெருக்கமான குறிப்பிட்ட நிறுவனங்களுக்குச் சாதகமாக இந்த நடைமுறைகள் வளைக்கப்பட்டு, மக்கள் பணத்தை விரயம் செய்யும் முயற்சி பின்னணியில் நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
எனவே, தற்போது முன்னெடுக்கப்படும் இந்த முறையற்ற மற்றும் ஊழலுக்கு வழிவகுக்கும் டெண்டர் நடைமுறையை அரசாங்கம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தகுதிவாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டு புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி, வெளிப்படையான முறையில் மீண்டும் டெண்டர் கோரப்பட வேண்டும் எனவும், இத்தகைய தவறான ஆவணங்களை உருவாக்கிய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வசந்த முதலிகே கேட்டுக்கொண்டார். அரசாங்கம் இந்த முறைகேடுகளைச் சரிசெய்யத் தவறினால், இதற்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கைகளும், மக்கள் போராட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

