ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் 1,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள்: ஏலம் விட சுங்கம் தீர்மானம்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 1,025க்கும் மேற்பட்ட வாகனங்கள், இறக்குமதியாளர்களால் இதுவரை விடுவித்துக்கொள்ளப்படாமல் தேங்கிக் கிடப்பதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

துறைமுகத்தில் தேங்கியுள்ள இந்த வாகனங்களில் சுமார் 625 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாகின்றன.

அத்துடன், மொத்தமாக உள்ள 1,025 வாகனங்களும் 3 மாதங்களுக்கும் மேலாகத் துறைமுகத்திலேயே முடங்கிக் கிடக்கின்றன.

இருப்பினும், இந்த வாகனங்கள் மீது சுங்க விதிகளின்படி எவ்வித சுங்கக் குற்றப் பதிவுகளும் இல்லை என்றும், சுங்கத் திணைக்களத்தால் இவை தடுப்பில் வைக்கப்படவில்லை என்றும் இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெளிவுபடுத்தியுள்ளார்.

சந்தை தேவைக் குறைவு, நிதி நெருக்கடி உள்ளிட்ட இறக்குமதியாளர்களின் சொந்தக் காரணங்களினாலேயே இவை விடுவிக்கப்படாமல் உள்ளதாகக் கருதப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் அந்நியச் செலாவணி நெருக்கடி நிலவும் இக்காலகட்டத்தில், பெரும் தொகையைச் செலவிட்டு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்படாமல் துறைமுக இடத்தை அடைத்துக்கொண்டிருப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கும், துறைமுக வருவாய்க்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129ஆவது பிரிவின் கீழ், துறைமுகத்திற்கு வந்து ஒரு மாத காலத்திற்குள் உரிய வரிகளைச் செலுத்தி விடுவிக்கப்படாத பொருட்களை ஏலம் மூலமாகவோ அல்லது டெண்டர் கோரியோ விற்பனை செய்யச் சுங்கத்திற்கு முழு அதிகாரம் உள்ளது.

அதன்படி, இந்த வாகனங்களை எதிர்காலத்தில் ஏலத்தில் விற்பனை செய்து, அரசுக்குச் சேர வேண்டிய வரிகள் மற்றும் துறைமுகக் களஞ்சியக் கட்டணங்களை அறவிட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறு விற்பனை செய்த பிறகு எஞ்சியத் தொகை ஏதேனும் இருப்பின், அது சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்கு வழங்கப்படும்.
இருப்பினும், தகுந்த மற்றும் நியாயமான காரணங்களால் வாகனங்களை உடனடியாக விடுவிக்க முடியாமல் போனதாக இறக்குமதியாளர்கள் சுங்கத்திடம் கோரிக்கை முன்வைத்தால், அது குறித்து பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்குச் சலுகை அளிக்கப்படும் என்றும் இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.