கொக்கிளாயில் 244 சிங்கள மீனவர் குடும்பங்களை நிரந்தரமாக குடியேற்றும் முயற்சிக்கு கஜேந்திரகுமார் எதிர்ப்பு

Meiveli Media Team


முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 244 மீனவர் குடும்பங்களை நிரந்தரமாக குடியேற்ற அரசாங்கம் முயற்சிப்பதாகவும்இ அதனை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காலந்தோறும் மீன்பிடித் தொழிலுக்காக கொக்கிளாய்க்கு வரும் மீனவர் குடும்பங்கள் சில மாதங்கள் தங்கியிருந்து பின்னர் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்புவது வழக்கமான நடைமுறை எனக் குறிப்பிட்டார். முன்னைய அரசாங்கங்களின் காலத்திலும் இக்குடும்பங்கள் நிரந்தர குடியிருப்புகளை அமைக்க முயன்ற போதிலும், அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் தற்போது, புயல் பாதிப்புகளுக்குப் பின்னர் பாதுகாப்பான குடியிருப்புகள் தேவை என்ற காரணத்தை முன்வைத்து, கொக்கிளாய் மேற்கு கிராம சேவகர் பிரிவில் அவர்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். இது தமிழ் பிரதேசங்களின் மக்கள் விகிதாசாரத்தை மாற்றும் நடவடிக்கையாக அமையக்கூடும் என்றும், இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள்கூட மேற்கொள்ளாத செயற்பாட்டை தற்போதைய அரசாங்கம் முன்னெடுப்பது பொருத்தமற்றது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள காணிகள் தொடர்பிலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறிய அவர், தெற்கைச் சேர்ந்த ஒருவருக்கு காணி ஒதுக்கப்பட்டதுடன், மேலதிக காணிகளும் ஆக்கிரமிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, அதனை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.