எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில்  வடக்கிற்கான சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

Meiveli Media Team

வடக்கிற்கான சர்வதேச வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் 28, 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. வடக்கிற்கான கைத்தொழில் துறை மன்ற அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஏற்பாட்டாளர்கள் இதனை தெரிவித்தனர்.  வடமாகாண தொழில்முனைவோர்,  இயந்திர வழங்குநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைத்து புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவதே கண்காட்சியின் பிரதான நோக்கமாகும். மேலும் உள்ளூர் தொழில்களை தேசிய மற்றும் சர்வதேச வலையமைப்புகளுடன் இணைக்கும் ஒரு சந்திப்புத் தளமாகவும் இது அமைகிறது. தொழில்துறையின் போட்டித்தன்மையை உயர்த்துவதற்கு புதிய இயந்திரங்கள், உற்பத்தி முறைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. காலத்தின் தேவைக்கேற்ப தொழில்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கிறது. இந்தியா மற்றும் தென்னிலங்கையில் இருந்து வடமாகாணத்திலுள்ள இயந்திர சாதனங்களின் உற்பத்தி இறக்குமதி மற்றும் விநியோகத்தில் ஈடுபடுவோரை வடமாகாணத்து தொழில் முயற்சியாளர்களுடன் இணைத்தல், தேவையான விஞ்ஞான தொழல்நுட்ப ஆலோசனைகளுக்கான வழிகாட்டல்களை வழங்கவும் உதவுகிறது.

வடமாகாண உற்பத்திப் பொருட்களை புதிய வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் இணைக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. சந்தையை அடைவதில் எதிர்கொள்ளப்படும் தடைகளை குறைத்து,  நிலையான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.வடமாகாண உற்பத்திகளின் தரம்இ புதுமை மற்றும் சந்தை மதிப்பை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ‘உள்ளூரில் உற்பத்தி செய்வதை பெருமையுடன் பயன்படுத்துவோம்’ என்ற மனப்போக்கை இந்த கண்காட்சி ஊக்குவிக்கிறது. இளைஞர்களை வேலைவாய்ப்பு தேடுபவர்களாக மட்டுமன்றி, புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குபவர்களாக மாற்றும் சிந்தனையை வளர்க்கிறது. தொழில், வர்த்தகம், சுற்றுலா மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை ஒருங்கிணைத்து வடமாகாணத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கிறது  என்றனர்.