உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – உயர்மட்ட முன்னாள் அரசியல் தலைவர் நாளை கைது செய்யப்படலாம் என தகவல்

Meiveli Media Team


உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மிக உயர்மட்ட முன்னாள் அரசியல் தலைவர் ஒருவர் இன்று அல்லது நாளைக்குள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அரசாங்கத்தின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட பொலிஸ் துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் சுனில் வடகல, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் முக்கிய சூத்திரதாரி மிக விரைவில் கைது செய்யப்படுவார் எனத் தெரிவித்துள்ளார். மேலும், குறித்த நபர் ஐந்து வெவ்வேறு அநாமதேய அல்லது புனைப் பெயர்களைப் பயன்படுத்தி செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவற்றில் ‘சோனிக்’ என்ற பெயர் ஒன்றாக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை அதிகாரிகளிடம் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ள போதிலும், தற்போதைய நிலையில் அவற்றை வெளியிடுவது விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மேலதிக விபரங்களை வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையான சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் வலுப்பெற்று வருகின்றன. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார், முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே மட்டுமன்றி, தேவை ஏற்பட்டால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான பின்னணியை வெளிக்கொணர்வதாக உறுதியளித்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்பதால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.