ரங்க திஸாநாயக்கவை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்குமாறு கூட்டு எதிர்க்கட்சி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் கோரிக்கை!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்கவுக்கு எதிராகக் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்றினால் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வமாகப் முறைப்பாடொன்று கையளிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் நிறைவடையும் வரை அவரது பணியை உடனடியாக இடைநிறுத்துமாறு ஆணைக்குழுவின் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நவ ஜனதா பெரமுனவின் தலைவர் சுகீஸ்வர பண்டார, பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்கவின் செயற்பாடுகள் குறித்து நாட்டுக்கு வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டதுடன், அவர் மக்கள் விடுதலை முன்னணியின் சட்டப் பிரிவின் முழுநேரச் செயற்பாட்டாளராக இருந்தவர் என்பதால் இவ்வாறான ஆணைக்குழுக்கள் எவ்வாறு சுயாதீனமாக இயங்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

மேலும், இது தொடர்பாக நந்தன குணதிலக்க மற்றும் கபில சந்திரசேன ஆகியோரிடம் பெருமளவிலான சான்றுகள் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றும் குறிப்பிட்ட அவர், அரசியல் பின்னணியைக் கொண்ட ரங்க திஸாநாயக்கவை உடனடியாக இப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் அஜித் மான்னப்பெரும, பொய்களைக் கூறி மக்களைக் கைது செய்பவர்கள், தமக்குத் தேவையான வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்வதற்காக தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் வகையில் அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகக் குற்றம் சாட்டினார். இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் என்பன ‘திசைகாட்டி’ அரசியலாக மாறியுள்ளதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றாமல் ஆணைக்குழுக்களை சுயாதீனமாக இயங்க விடுமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த எக்சத் ஜனரஜ பெரமுனவின் பந்துல சந்திரசேகர, தற்போதைய அரசாங்கமானது நாட்டில் உள்ள அனைத்து ஆணைக்குழுக்களையும் சிறுமைப்படுத்தியுள்ளதுடன், தமது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் நோக்கில் வேட்டையாடி வருவதாகத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவர் ஜனக்க ரணவக்க குறிப்பிடுகையில், ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கு உடன்படுவதாகக் கூறிக்கொண்டு அதற்கு முரணான வகையிலேயே ரங்க திஸாநாயக்க செயற்படுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளால் இந்த நிறுவனம் சர்வதேச ரீதியில் ஒரு வேடிக்கைப் பொருளாக மாறிவிடும் என்பதால் இவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு அது முடியும் வரை இவரது பணி உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் செயற்பட்டு வருவதாகவும், இதற்கென ஒரு முறையான தலைமைத்துவம் இருப்பதாகவும் தெரிவித்த பிரதிநிதிகள், பல தசாப்தங்களாகத் தம்மால் ஆட்சியில் இருக்க முடியும் எனச் சிலர் கூறுவது வெறும் பகற்கனவுகள் மட்டுமே என்றும் குறிப்பிட்டனர்.
இக்கூட்டு எதிர்க்கட்சியில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளடக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போதைக்கு இல்லை என்றும், ஆனால் தாம் சஜித் பிரேமதாசவிற்கும் இதற்காக அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர்கள் பதிலளித்தனர்.
இந்த நிகழ்வில் அஜித் மான்னப்பெரும (ஐக்கிய தேசியக் கட்சி), சுகீஸ்வர பண்டார (தலைவர் – நவ ஜனதா பெரமுன), பந்துல சந்திரசேகர (எக்சத் ஜனரஜ பெரமுன), ஜனக்க ரணவக்க (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி), பேஷல சேரசிங்க (லங்கா சமசமாஜக் கட்சி) மற்றும் சமீர சேனநாயக்க (ஸ்ரீலங்கா மகாஜன கட்சி) உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


