காலி மாவட்டத்தின் நான்கு மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்: துறைமுகங்களில் சேரும் பைபர் கிளாஸ் கழிவுகளை மீள்சுழற்சி செய்ய பேருவளையில் புதிய அலகு – பிரதி அமைச்சர் ரத்ன கமகே
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

காலி மாவட்ட மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்காக நடத்தப்படும் “மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்” இரண்டாவது அமர்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நேற்று (27) காலி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இங்கு கலந்துரையாடிய பிரதி அமைச்சர் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்தினார். அதற்கமைய, காலி, தொடந்துவ, ஹிக்கடுவ மற்றும் அம்பலாங்கொட ஆகிய நான்கு மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டப் பணிகளை ஓராண்டுக்குள் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மீன்பிடித் துறைமுகங்களில் சேரும் பைபர் கிளாஸ் (Fiberglass) கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்வதற்காக, Clean Sri Lanka வேலைத்திட்டம் மற்றும் “சீநோர்” (Cey-Nor) நிறுவனம் இணைந்து பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் விசேட மீள்சுழற்சி நிலையமொன்றை நிறுவவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். இதற்கான இயந்திரங்கள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் இதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இக்குழுக்கூட்டத்தில் மேலும் ஆராயப்பட்ட விடயங்கள்:
– கொஸ்கொட கல்பொக்க மீன்பிடித் துறைமுகத்தில் காணப்படும் பாறையை வெடிவைத்து
அகற்றும் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தல்.
– மாவட்டம் முழுவதும் பரந்துள்ள 37 மீன்பிடி இறங்குதுறைகளை (Fishing Landing
Sites) அபிவிருத்தி செய்யும் திட்டங்களின் தற்போதைய நிலையை ஆராய்தல்.
– மீன்பிடித் துறைமுக வளாகங்களுக்குள் முறையான கழிவு முகாமைத்துவக் கட்டமைப்பை
உருவாக்குதல்.
– ஏரி முகாமைத்துவம் மற்றும் நன்னீர் மீன்பிடித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல்.
கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மீனவ சமூகத்தின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் அதேவேளை, சூழல் நட்பு ரீதியிலான கடற்றொழில் துறையை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.கே. ஜயசுந்தர, நிசாந்த பெரேரா, இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டு தாபனத்தின் தலைவர் பி.ஏ.பி. கபில பமுணுஆரச்சி, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் முகமது நவ்ராஸ் நாசர், காலி மாவட்டச் செயலாளர் கே.யு. சந்திரலால் மற்றும் தென் மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

