பொதுநலவாய காலநிலை நிதி அணுகல் மையத்தின் 8வது வழிநடத்தல் குழு கூட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பொதுநலவாய காலநிலை நிதி அணுகல் மையத்தின் (CCFAH) 8வது வழிநடத்தல் குழு கூட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா, பொதுநலவாய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், காலநிலை நிதி நிபுணர்கள், அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் சர்வதேச பங்குதாரர்களின் பங்கேற்புடன் இன்று (28) கொழும்பில் நடைபெற்றது.
பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள வளரும் நாடுகளுக்கு காலநிலை மாற்றம் தொடர்ந்தும் கடுமையான சவாலாக விளங்கும் இத்தருணத்தில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை பெருமை கொள்கிறது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர, காலநிலை மாற்றம் என்பது இனிமேலும் ஒரு தொலைதூர அச்சுறுத்தல் அல்ல என்றும், அது இலங்கை உட்பட உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும் தற்போதைய நிஜமாக உருவெடுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

தீவிர வானிலை நிகழ்வுகள், மாறிவரும் மழைவீழ்ச்சி கோலங்கள், வாழ்வாதாரங்களுக்கான நெருக்கடிகள், உணவுப் பாதுகாப்பிற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள், உள்கட்டமைப்பு சேதங்கள் மற்றும் நிலையான தேசிய அபிவிருத்திக்கான பரந்த அபாயங்கள் போன்றவற்றின் மூலம் இதன் தாக்கங்கள் ஏற்கனவே தெளிவாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்படக்கூடிய பல நாடுகளைப் பொறுத்தவரை, சவாலானது அவர்களின் இலக்குகளில் உள்ள குறைபாடு அல்ல, மாறாக இலக்குகளுக்கும் அவற்றைச் செயல்படுத்துவதற்கும் இடையே உள்ள இடைவெளியே ஆகும் என்றும் பதில் அமைச்சர் மேலும் எடுத்துரைத்தார்.
நாடுகள் காலநிலை கொள்கைகள், தேசிய அர்ப்பணிப்புகள் மற்றும் தழுவல் முன்னுரிமைகளைத் தொடர்ந்து வகுத்து வருகின்ற போதிலும், நிதியைப் பெற்றுக்கொள்வதிலும், வங்கியியல் ரீதியாக சாத்தியமான திட்டங்களைத் தயாரிப்பதிலும், நீண்ட கால தொழில்நுட்பத் திறனைப் பேணுவதிலும் இன்னும் குறிப்பிடத்தக்க தடைகள் நீடிக்கின்றன என அவர் தெரிவித்தார்.
காலநிலை நிதியுதவியானது எளிதில் அணுகக்கூடியதாகவும், முன்கூட்டியே கணிக்கக்கூடியதாகவும், பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் யதார்த்தங்களுக்குப் பதிலளிக்கக்கூடியதாகவும் அமைய வேண்டும் என்று கௌரவ அருண் ஹேமச்சந்திர வலியுறுத்தினார்.
மேலும், காலநிலை நிதி வழிமுறைகள் மிகவும் சிக்கலானதாக இருக்கக் கூடாது என்றும், அவ்வாறு இருந்தால் மிகவும் தேவைப்படும் நாடுகள் அவற்றின் பலன்களைப் பெறுவதில் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
காலநிலை நிதியைப் பெற்றுக்கொள்வதில் உறுப்பு நாடுகளுக்கு ஆதரவளிக்கும் தனது 10 ஆண்டு காலப் பயணத்தை பொதுநலவாய காலநிலை நிதி அணுகல் மையம் நிறைவு செய்யும் இந்நாளில், பொதுநலவாய நாடுகளின் ஒற்றுமை, தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு (South-South cooperation) மற்றும் பலப்படுத்தப்பட்ட சர்வதேச பங்களிப்புகளின் முக்கியத்துவத்தை பதில் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதன் மூலமே காலநிலை நிதியானது வெறும் கலந்துரையாடல்களிலிருந்து செயல்பாடுகளாகவும், அர்ப்பணிப்புகளிலிருந்து நடைமுறைத் திட்டங்களாகவும், உலகளாவிய தளங்களிலிருந்து அடித்தட்டு சமூகங்களைச் சென்றடையும் வகையிலும் மாற்றமடையும் என அவர் குறிப்பிட்டார்.
காலநிலை நடவடிக்கை, தழுவல், பின்னடைவு மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றில் இலங்கையின் ஆக்கபூர்வமான சர்வதேச பங்களிப்பை மீள உறுதிப்படுத்திய கௌரவ அருண் ஹேமச்சந்திர, நாடுகளின் காலநிலை பின்னடைவை வலுப்படுத்துவதற்கும் காலநிலை நிதிக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும் ஆதரவளிக்கும் சுற்றுச்சூழல் அமைச்சு, பொதுநலவாய செயலகம் மற்றும் அனைத்து பங்காளிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.



