மாகாண சபை தேர்தல் நிதி மாற்றம் குறித்து டில்வின் சில்வா கூறுவது தவறு; நாடாளுமன்ற அனுமதியின்றி நிதியை மாற்ற முடியாது – மனோ கணேசன்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஜே.வி.பி கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவுக்கு மார்க்சிய அல்லது கம்யூனிச அரசியல் வரலாறு உள்ளது என்றும், அவர் அரசாங்கத்தில் ஜனாதிபதி, பிரதமர் அல்லது அமைச்சர் போன்ற எந்தவொரு பதவிகளையும் வகிக்காவிட்டாலும் கூட, அரசாங்கம் குறித்து தீர்க்கமான கருத்துக்களைக் கூறுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது என்று தெரிகின்றதாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அது அவர்களின் அரசியல் முறை என்பதால் அதில் தமக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், டில்வின் சில்வா யாழ்ப்பாணத்திற்குச் சென்று வெளியிட்ட ஒரு கருத்து முற்றிலும் தவறானது எனச் சுட்டிக்காட்டினார்.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, தற்போது ‘டித்வா’ புனர்நிர்மாண பணிகளுக்காக செலவிடப்பட்டுவிட்டது அல்லது ஒதுக்கப்பட்டுள்ளது என்று டில்வின் சில்வா கூறியிருப்பது பிழையான கூற்றாகும் என அவர் தெரிவித்தார்.
நிதி சம்பந்தமான முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என்பதை நினைவூட்டிய அவர், நாடாளுமன்றத்தில் ஒரு தேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, மற்றொரு துறைக்கு மாற்ற வேண்டுமானால் அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படுவது கட்டாயமாகும் என்றும் கூறினார்.
இது தொடர்பாக தாம் நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவிடம் பேசியுள்ளதோடு, எழுத்து மூலமாகவும் அறிவித்து, இவ்விடயம் குறித்து விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு 159 பேர் பெரும்பான்மை பலம் இருந்தாலும் கூட, நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு முறையான அனுமதி பெறாமல் ஒரு துறைக்கான நிதியை இன்னொரு துறைக்கு மாற்ற முடியாது என்றும், இதனை தோழர் டில்வின் சில்வா மறந்துவிட்டார் என்றே தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இம்முறை தேர்தல் நடக்குமா என்று தாம் நம்புகிறீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நகைச்சுவையுடன் பதிலளித்த அவர், தாம் நம்புகிறேனோ இல்லையோ, ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகிய தரப்பினர் அரசாங்கம் தேர்தலை நடத்தாது என்றே நம்புவதாகவும், அதனால்தான் அரசாங்கம் தேர்தலை வைக்காமல் இழுத்தடிக்கிறது என்றும் கூறினார்.
எனவே, இந்த கேள்வியை ஊடகங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், டொலரின் மதிப்பு உயர்வு குறித்துக் கேட்கப்பட்ட போது, அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் போலவே, டொலரின் மதிப்பும் நிலையற்றதாக ஏறியும் இறங்கியும் சென்று கொண்டிருக்கிறது என்றும், நாட்டில் உருப்படியாக எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை என்றும் மனோ கணேசன் சாடினார்.

