கொழும்பு செட்டியார் தெரு எவர்கிரீன் விளையாட்டு கழகத்தின் வெசாக் பௌர்ணமி ‘மெகி நூடில்ஸ்’ தன்சல் அன்னதான நிகழ்வு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு செட்டியார் தெரு எவர்கிரீன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், இரண்டாவது தடவையாக நடாத்தப்படும் “வெசாக் பண்டிகை மெகி நூடில்ஸ் தன்சல்” அன்னதான நிகழ்வு பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள், அரச அதிகாரிகள், வர்த்தகர்கள் எனப் பலரின் பங்களிப்புடன் கோலாகலமாக இன்றைய தினம் (27) ஆரம்பிக்கப்பட்டது.

வருடம் முழுதும் வருகின்ற 12 பௌர்ணமிகளில், மே மாதத்தில் வருகின்ற வெசாக் பௌர்ணமியானது பௌத்த மக்களைப் பொறுத்தவரையில் கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் (இறைவனடி சேர்தல்) ஆகிய முப்பெரும் நிகழ்வுகளைக் குறிக்கும் ஒரு சிறப்பான தினமாகும்.

இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில், அனைத்து மத மக்களும் ஒன்றிணைந்து இவ்வாறான தான தர்மங்கள் மற்றும் புண்ணியக் காரியங்களில் ஈடுபடுவது வழமையாகும். அந்த வகையில், இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த மாபெரும் தன்சல் நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டு இந்த அன்னதானத்தைப் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

இந்த மாபெரும் புண்ணிய நிகழ்வில் சமயத் தலைவர்களாக ஜிந்துபிட்டிய சாரானந்த பௌத்த மத்தியஸ்தான விகாராதிபதி வணக்கத்திற்குரிய காடட கஸ்யாயே பஞ்ஞான நந்த தேரோ மற்றும் செட்டியார் தெரு முத்து விநாயகர் ஆலய பிரதம குரு வணக்கத்திற்குரிய சிவஸ்ரீ குகனேஸ்வர குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆசி வழங்கினர்.

மேலும், அரச அதிகாரிகளாக புறக்கோட்டை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் முக்கிய உயர் அதிகாரிகளான M. W. S. P. டீ சில்வா மற்றும் W. D. தமித் சில்வா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

வர்த்தக சமூகத்தின் சார்பில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு சரவணன், செட்டியார் தெரு மக்கள் வங்கி மேலாளர் திருமதி. S. ஷர்மிலா, சிவா ஜுவல்லர்ஸ் அதிபர் சிவசுப்பிரமணியம் மற்றும் நியூ கெனன் ஜுவல்லரி அதிபர் கோபி ஆகியோர் தங்களது பேராதரவை வழங்கியிருந்தனர்.

இவர்களுடன் எவர்கிரீன் விளையாட்டு கழகத் தலைவர் R. கணநாத பிள்ளை மற்றும் மலையக கல்வி அபிவிருத்தி மன்ற ஸ்தாபகத் தலைவர் பிச்சை தவக்குமார் உள்ளிட்ட கழக உறுப்பினர்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

இன, மதப் பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து, இந்த மே மாத வெசாக் பௌர்ணமி நன்னாளை அறவழியில் கொண்டாடும் வகையில் அமைந்த இத்தன்சல் நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.