மாகாண சபை தேர்தலை நடத்த அரசுக்கு ஜீவன் தொண்டமான் சவால்; மக்களின் செல்வாக்கை நிரூபிக்க வலியுறுத்தல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து தேர்தல் ஆணைக்குழுவே இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும், அரசாங்கம் உடனடியாக இத்தேர்தலை நடத்தி மக்கள் மத்தியில் தமக்குள்ள செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறாது என ஜே.வி.பி யின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா அண்மையில் தெரிவித்திருந்த கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், டில்வின் சில்வா அவர்கள் ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் அவரது தனிப்பட்ட கருத்தை கூற அவருக்கு உரிமை உண்டு என்றார்.
எனினும், தேர்தல் தொடர்பான இறுதி முடிவை ஒரு கட்சியோ அல்லது அதன் தலைமத்துவமோ எடுக்க முடியாது என்றும், அதனை சுயாதீன தேர்தல் ஆணைக்குழு மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் தயாராக இருக்கும் பட்சத்தில், தேர்தலை எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம் என்று தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளதையும் அவர் நினைவுபடுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு வற்புறுத்தியவர்கள், இன்று மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய ஜீவன் தொண்டமான், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்த இன்று ஆட்சியில் உள்ளவர்கள் முன்வருவதில்லை எனச் சாடினார்.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நீதியின் பக்கம் நின்று பேசியதை நினைவு கூர்ந்த அவர், ஜனாதிபதி அவர்கள் இன்று தற்போதைய பதவியில் இல்லாதிருந்தால், மாகாண சபை தேர்தலை நடத்தக் கோரி கப்புக் கொடி ஏந்தி நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடியிருப்பார் என்பதே யதார்த்தம் என்றும் குறிப்பிட்டார்.
அதேநேரம், தற்போதைய பொருளாதார சூழ்நிலை மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து வினவப்பட்ட போது, ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளதால், உலகளாவிய ரீதியில் பல நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என அவர் தெரிவித்தார். இத்தகைய சர்வதேச காரணிகளால் ஏற்படும் பொருளாதார சவால்களின் போது, அரசாங்கத்தை விமர்சிப்பதை விடுத்து, அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

