மர்மமான முறையில் உயிரிழந்த ரங்க நிஷாந்தவின் மரணப் பரிசோதனை அறிக்கை சந்தேகத்திற்குரியது; புதிய குழுவொன்றை நியமிக்கக் கோரி உதய கம்மன்பில வலியுறுத்து

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மர்மமான முறையில் மரணமடைந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் மரணம் மற்றும் அது தொடர்பான மரணப் பரிசோதனை அறிக்கை என்பன பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்றைய தினம் எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், ரங்க நிஷாந்தவின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என மருத்துவக் குழு முடிவெடுத்துள்ள போதிலும், அது ஒரு முழுமையான பரிசோதனை அல்ல என சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக திசுக்கயியல் மற்றும் நச்சியியல் பரிசோதனைகளின் முடிவுகள் வருவதற்கு முன்னரே இது தற்கொலை என மருத்துவக் குழு முடிவெடுத்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆரம்பத்திலேயே இது தற்கொலை எனக் கூறியிருந்த நிலையில், மருத்துவக் குழுவினர் ஏதேனும் அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகினார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும், கத்தியில் இருந்த கைரேகைகள் மற்றும் ஆடைகளில் இருந்த இரத்தக் கரைகள் ரங்க நிஷாந்தவுக்கு உரியவை தானா என்பது உறுதிப்படுத்தப்படாமல் அவசர அவசரமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.

அத்துடன், இந்த மரணப் பரிசோதனையை மேற்கொண்ட குழுவில் தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் நண்பர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, தற்போதைய அறிக்கையை நிராகரிப்பதாகத் தெரிவித்த அவர், நாட்டின் சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிகள் மூவர் அடங்கிய புதிய சுயாதீனக் குழுவொன்றின் ஊடாக மீளவும் மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இலங்கையில் அண்மைக்காலமாக வெளிநாட்டு கணினி குற்றவாளிகள் அதிகளவில் கைது செய்யப்படுவது குறித்தும் இதன்போது கம்மன்பில தனது கவலையை வெளியிட்டார். கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் 1000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கணினி குற்றவாளிகள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 2024 இல் 7,210 ஆக இருந்த கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 2025 இல் 12,650 ஆக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக NDB வங்கி, திறைசேரி, தபால் திணைக்களம் மற்றும் கொமர்ஷல் வங்கி உள்ளிட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதை அவர் நினைவூட்டினார்.

முறையான பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பரிசோதனைகள் இன்றி வெளிநாட்டவர்களுக்கு இலகுவாக விசா வழங்கும் முறைமையால், இலங்கை சர்வதேச குற்றவாளிகளின் புகலிடமாக மாறி வருவதாகவும் அவர் எச்சரித்தார்.
சிங்கப்பூர் போன்ற நாடுகள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் கண்டறிவதைப் போல, இலங்கையும் தனது புலனாய்வுப் பிரிவை பலப்படுத்த வேண்டும் அல்லது விசா வழங்கும் பழைய முறையை அமுல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கை தொடர்ந்தும் ஹேக்கர்களின் சொர்க்கபுரியாக காணப்பட்டால், நாட்டில் தற்போதுள்ள அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவதோடு புதிய முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் வருவதற்கு அச்சப்படுவார்கள் என்றும், இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்றும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.