திறைசேரியின் 80 கோடி ரூபா மாயம் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடுகள்: திஸ்ஸ அத்தநாயக்க கடும் விமர்சனம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பணிமனையில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க,
அரச திறைசேரியில் சுமார் 80 கோடி ரூபா பணம் காணாமல் போயுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நேரடிப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தமது உழைப்பின் மூலம் நாட்டுக்கு அனுப்பிய டொலர் வருமானம் மற்றும் ஏற்றுமதி, சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட மக்களின் பணமே இவ்வாறு மாயமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 75 வருடங்களாக மத்திய வங்கியால் முன்னெடுக்கப்பட்ட கடன் முகாமைத்துவப் பணிகள் நிதியமைச்சிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பத்திலேயே இவ்வாறான பாரிய நிதி முறைகேடு இடம்பெற்றிருப்பது, அரசாங்கத்தின் கடன் முகாமைத்துவக் கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதையே காட்டுகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிதி விவகாரம் தொடர்பாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை குறித்து கடும் சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்த அத்தநாயக்க, இது தற்கொலைதான் எனப் பொலிஸார் முன்கூட்டியே தீர்மானிப்பது பாரிய சிக்கலானது என்றும், இந்த மரணம் குறித்து வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

அரசாங்கம் தனது தவறுகளை மறைப்பதற்காக, உயிரிழந்த அதிகாரி மீது பழியைச் சுமத்த முயற்சிப்பதாகத் தான் கருதுவதாகவும், ஜே.வி.பி-யின் முழுநேர உறுப்பினர்களையும் அனுபவமற்ற அதிகாரிகளையும் திறைசேரியின் முக்கிய பதவிகளில் நியமித்ததே இவ்வாறான குழப்பங்களுக்கு அடிப்படைக் காரணம் என்றும் அவர் சாடினார்.
அதேபோல், மே முதலாம் திகதி ஏற்படக்கூடிய மக்கள் எதிர்ப்பைத் தவிர்க்கவே, அரசாங்கம் அன்று மேற்கொள்ளவிருந்த எரிபொருள் விலை அதிகரிப்பைத் திட்டமிட்டு மே இரண்டாம் திகதிக்கு மாற்றியது. சர்வதேச சந்தையில் மினெண்ணெய் விலை குறையும்போது அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்காத அரசாங்கம், பெட்ரோலுக்கு 49% மற்றும் டீசலுக்கு 64% என அதிகப்படியான வரிகளை அறவிடுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

ஒரு லீட்டர் எரிபொருளில் 100 ரூபா நட்டம் ஏற்படுவதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய் என்றும், எரிபொருள் கொள்வனவுச் செயற்பாடுகளுக்குப் பின்னால் பாரிய ஊழல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்துத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி மே தினக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காகப் பெருமளவிலான அரச வாகனங்களையும், 2000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரையும் பயன்படுத்தி சுமார் 30 முதல் 40 மில்லியன் ரூபா வரையிலான மக்கள் பணத்தை வீணடித்துள்ளதாகக் குறிப்பிட்டார். திறைசேரி நிதி காணாமல் போனமை மற்றும் தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டத்தை “சிறு தவறுகள்” என ரில்வின் சில்வா வர்ணிப்பது கண்டிக்கத்தக்கது என்றும், முந்தைய அரசாங்கங்கள் செய்த தவறுகளையே மீண்டும் செய்வதற்கு மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணையை வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான பொருளாதார வலயம் தொடர்பான ஜப்பான் தூதுவரின் யோசனையை அரசாங்கம் அலட்சியம் செய்துள்ளதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 9% வரை உயர்த்தக் கிடைத்த வாய்ப்பு நழுவிப்போயுள்ளதாகவும், இது அரசாங்கத்தின் பலவீனமான முகாமைத்துவத்தையே பிரதிபலிக்கிறது என்றும் கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.