லண்டனில் நொடிக்கு நொடி விறுவிறுப்பைத்தந்த ஹரினி ஶ்ரீகரனின் அரங்கேற்றம்: இதிகாசங்களை அறிந்திராத இளந்தலைமுறைக்கு இலகுவாக கதைசொல்லிச் சென்ற வர்ணம்

- றஜித்தா சாம் பிரதீபன் -

லண்டனில் தொடர்ச்சியான பல அரங்கேற்றங்களில் பார்வையாளராக பங்கேற்றிருக்கிறேன்; பல அரங்கேற்றங்களில் தொகுப்பாளராக இணைந்திருக்கிறேன். நாடகத்துறை என் பட்டப்படிப்பிற்குரிய துறையாக கொண்டபோதும் நடனத்தையும் விருப்போடு பயின்றவள் என்ற நிலையில் பரதநாட்டிய அரங்கேற்றங்களில் பங்கேற்பது எப்போதும் எனக்கு ஆர்வத்தை கூட்டுவதுண்டு. வழமையான, அலாரிப்பு, ஜதிஸ்வரம், கௌத்துவம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா என்ற   வரிசைகளில் புதிய படைப்பாக்க அழகியலை கொண்டு வர முடியாதா அல்லது முயற்சிக்கப்படவில்லையா என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழுவதுண்டு. இந்தக் கேள்விகளோடு  குரு பிரசாந்தி உதயபாபு அவர்களின் மாணவி செல்வி ஹரிணி ஶ்ரீகரன் அவர்களின பரதநாட்டிய அரங்கேற்றத்தை மெய்வெளி தொலைக்காட்சியில் நேரலை செய்வதற்காக  ஜனவரி 24  2026  சனிக்கிழமை இலண்டன் Beck Theatre க்கு சென்றிருந்தேன்.

கலாஷேத்திரா கலைப்பாரம்பரிய பின்னணியைக் கொண்ட ஆசிரியை பிராந்தி உதயபாபு அவர்களின் கலைநேர்த்தியும், ஹரினியின் ஆத்மாத்த பரதக்கலை நேசிப்பும், ஒவ்வொரு உருப்படிகளையும் செறிவூட்டிய யாதவன் அவர்களின் குரலும் அணிசேர்கலைஞர்களின் வளமான ஒத்திசைவும் அரங்கில் நிறைந்திருந்த அத்தனை பேரையும் ஆனந்த திசையிலேயே நிலைநிறுத்தி வைத்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.

இன்றைய புலம்பெயர் சூழலில் பரத நடனக் கலையின் அழகியலை, பக்தியில் முகிழ்க்கும் பரவச உணர்வுகளை, காவியங்கள்  சொல்லும் காதலின் கனிவை, புராணங்கள் சுட்டிநிற்கும் அறிவுப்புதிரை; எளிமையாக, முழுமையாக, செழுமை குறையாது  வெளிப்படுத்தக்கூடிய இளம் கலைஞர்களை  புலம்பெயர் தேசங்களில் உருவாக்க முடியுமா என்ற வாதங்களும் பரவலாக இடம் பெறுவதுண்டு.  இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைபகர்ந்ததாக அமைந்திருந்தது ஹரினியின் அரங்கேற்றம்.

காலத்தையும் இடத்தையும் தாண்டி நகரும் அனுபவத்தைத் தரக்கூடிய,  பிராசாந்தி உதயபாபு  அவர்கள் தேர்வு செய்த பரதநடன அரங்கேற்ற உருப்படிகளும், அபினயங்களுக்கூடான ஹரினியின் கதைசொல்லும் பாங்கும், உயிரோட்டமுள்ள பரதநடனக்கலையின் சிறப்பை அனுபவிக்க வைத்த பொழுதாகவே இன்றைய அரங்கேற்றம் இருந்தது. ஒவ்வொரு உருப்படிகளும் கச்சிதமாக அமைக்கப்படிருந்தாலும் நொடிக்குநொடி விறுவிறுப்பை காட்டிய  வர்ணம் தந்த அனுபவத்தைபற்றி பதிவிடவேண்டும் என்பதே என்பெரும் அவா.

யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தான கிருஷ்ணனை முன்னிறுத்தி மகாபாரத்த்தில் பாஞ்சாலியின் மானம் காத்த மாயவன் கண்ணனின் புகழ் பாடுவதாய் ஆசிரியை பிரசாந்தி உதயபாபு வரிகள் எழுத, ஆடற் சொற்கட்டுகளை கோர்வையாக்கி  பாடலை அமைத்திருந்தார் மதிப்பிற்குரிய வித்தவான் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

மகாபாரதம் பல மர்மங்கள் நிறைந்த கதைகளைக் கொண்ட காவியம். இந்த மிகப்பெரிய இதிகாசமான மகாபாரதத்தில் இடம்பெறும் ஒரு ஆழமான நிகழ்வான சூதாட்டக் கதையே வர்ணமாக அமைக்கப்பட்டிருந்தது. ஹரினி நடனத்தில் ஆடியது  வெறும் சூதாட்ட விளையாட்டல்ல; அகந்தையின் வீழ்ச்சியை, தர்மத்தின் சோதனையை,  பெண்ணியத்தின் அவமதிப்பை மற்றும் அநீதிக்கு எதிரான மௌனக் குரலை ஒருங்கே அபினயித்துக் காட்டிய ஒரு சக்திவாய்ந்த  கணமாக வர்ணம் அமைந்திருந்தது. பகடை வீசும் பாங்கும், நொடிக்கு நொடி மாறும் பாத்திரங்களின் அபினயமும், முழுமண்டி நிலையில் வெளிப்படுத்திய  கௌரவரின் வீர தீர சூழ்ச்சியும்  அகந்தையையும்; பாண்டவரின் தோல்வியையும் அவமானத்தையும், அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார் ஹரினி.  இமைகள் மூட மறந்து கண்கள் வழி காட்சிகள் கச்சிதமாக கடத்தப்பட்டன.  விரல்களின் சொடுக்கிடலும்,  உடலின் அசைவும்,  கண்களில் ஒளிர்தந்த பார்வையும்  சூதாட்ட களத்தின் பரபரப்பை வெளிப்படுத்தியிருந்தது.

ஆசிரியை பிரசாந்தி உதயபாபு அவர்கள் வடிவமைத்த வர்ணத்தின் படைபாக்க உயர்வு பற்றி மதிப்பிற்குரிய காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி அவர்களும், பிரதம விருந்தினராக இலங்கைதில் இருந்து வருகை தந்து சிறப்பித்திருந்த கலாகீர்த்தி சாந்தினி சிவநேசன்அவர்களும் பெரிதும் புகழ்நது  பாராட்டி இருந்தார்கள்.  அவர், யாழ்ப்பாணததில் பரதநாட்டியத்தைக் விருட்சமாக்கி பல

கிளைகளாகப் பரப்பி பெருமை சர்த்த கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா அவர்களின் மகள் என்பதோடு இன்றைய அரங்கேற்ற நாயகி ஹரினி ஸ்ரீதரனின் குரு பிராசாந்தி உதயபாபு அவர்கள் சாந்தினி சிவநேசன் அவர்களின் மாணவி என்பதும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.

வர்ணத்தில், தர்மபுத்திரரின் தர்மநம்பிக்கை, சகுனியின் சூழ்ச்சி, துரியோதனனின் அகந்தை, சபையில் திரௌபதியின் அவமானம்  என்பவற்றை வெளிக்கொணரும் பல பாத்திரங்களின் வெளிப்படுத்தலை தன் தனியான  முக அபினய பாவம், கண் அசைவு, கைமுத்திரைகள், மற்றும் லயத்தோடு ஹரினி கச்சிதமாக  உயிர்ப்பித்துருந்தார். என் அருகில் அமர்ந்திருந்த என் மகள்  ‘திரௌபதி பாவம்  என்னம்மா’ என்ற போது இதிகாசங்களை முழுமையாக அறிந்திராத இளந்தலைமுறைக்கும் இலகுவாக கதைசொல்லிச் சென்றிருக்கிறது ஹரிணியின் வர்ணம்.

இந்த வர்ணத்தின் உணர்ச்சித் தீவிரத்துக்கும், லய ஒழுங்குக்கும், நடனத்தின் உயிர்ப்புக்கும் அடித்தளமாக இருந்தவர்கள் அன்றைய அணிசேர்  கலைஞர்கள் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, நடனத்துக்கும் இசைக்கும் பாலமாக பிரசாந்தியின்  நட்டுவாங்கமும், ஸ்ரீபாலசந்தர் அவர்களின்  மிருதங்க நிரவல்களும்  அடவுகளின் துல்லியத்தையும், பாதங்களின் ஓசையையும்,  அபிநயத்தின் நிறுத்தங்களையும்   ஒரே லயத்தில் கட்டுப்படுத்தி, ஹரினியை வழிநடத்தி இருந்தது.  சூதாட்டக் காட்சியில் சகுனியின் சூழ்ச்சி வெளிப்படும் போது வரும் கூர்மையான நட்டுவாங்க ஒலி, பகடை ஆடுதலில் பரவசப்படுத்திய மிருதங்க ஓசை,  திரௌபதியின் வேதனையில் ஒலிக்கும் கனத்த லயம், கிருஷ்ணனின் அருள் வெளிப்படும் தருணத்தில் மென்மையாக மாறும் தாள நயம் – இவை அனைத்தும் பார்வையாளர்களின் நெஞ்சைத் தட்டி உணர்வை கதையோடு ஒட்டவைத்தது என்றே கூறலாம்.  இதேவேளை ஹரினியின் வர்ணத்தின் உயிராக, அனைத்து நடன உருப்படிகளின் அபிநயத்துக்கும் உணர்வின் வழி காட்டியவர் பாடகர் யாதவன். பாடலின் வரிக்குவரி வேதனை, கோபம், பிரார்த்தனை, திரௌபதியின் அவமானத்தில் கனத்த குரலாய், கிருஷ்ணனைச் சரணடைந்த தருணத்தில் உள்ளத்தை உருக்கும் கருணைக் கேவலாய் யாதவன் அவர்களின் குரல் மூலம் ஹரினியின்  பாவநயம் மேடையில் உயிர் பெற்றிருந்தது. இந்த வர்ணம் கண்ணால் காணும் காட்சியாக மட்டுமல்ல, உள்ளத்தால் உணரும் அனுபவமாக மாற்றியிருந்தார்கள் அணிசேர்கலைஞர்கள். ஜலதரனின் வயலினும், ஞானி அவர்களின் குழல் இசையும், சிதம்பரநாதனின் கஞ்சிரா மற்றும்  sound effectsம் வர்ணத்தின் வாசத்தை முழுமையாக நுகரச் செய்திருந்தன.

பக்குவமாக பெற்றோர்கள் வாய்க்கப்பெற்றால் சீர்மையான கலைஞர்களை உருவாக்க முடியும் என்பதற்கு திரு திருமதி ஸ்ரீதரன் தம்பதிகள் சான்றாகி நின்றார்கள் என்றே கூற வேண்டும்.  அவர்களின் ஆரம்ப உரையில் குரு பிரசாந்தி  அவர்களின் ஒழுக்க வழிகாட்டலுக்கும் கற்பித்தல் திறனுக்கும் மதிப்பளித்து கூறிய வார்த்தைகள் நல்ல குருவிற்கான மரியாதையாகவே எனக்கு பட்டது.  புலம்பெயர் தேசத்தின் ஈழத்தமிழ் அடையாள இருத்தலுக்கான வாழ்வியல் போராட்ட நகர்தலில், கலையாகிலும் மொழி கற்றலாகிலும் முழுமையான புரிதலை மாணவர்களுக்கு கொடுத்து வளர்க்கப்படும் கலையே  அக்கலைஞர்களோடு நிலைத்து நிற்கும் என்பது  என் புரிதல். இந்த வகையில் மாணவர்களை உருவாக்க பாடுபடும் ஆசரிரியை பிரசாந்தி உதயபாபு அவர்களை பாராட்டுவதோடு, பரதநாட்டிய கலை நேசிப்போடு அவையோர் சுவைக்க வைத்த இளங்கலைஞர்  ஹரினிக்கும் மெய்வெளி ஊடக குழுமம் சார்பில் வாழத்துக்களைத் தெரிவித்து நிற்கிறேன்.

கலையுணர்வும் அழகும் தொலைந்துவிடாத மாலைப் பொழுதாக ஹரினி ஶ்ரீகனின் அரங்கேற்றம் அமைந்திருந்தது.