எங்கள் பெரட்டுக்களம்

- மலையருவி -

சேவல் கூவலில் எழுந்து
தேநீர் கசாயம் குடித்து…
முண்டாசினை தலையில் கட்டி
மலைக்கோட்டினை போர்த்த…
முதலாம் சங்கு ஒலி ஒலிக்க…
வீட்டைவிட்டு..
பிரட்டுக்களத்தினை நோக்கி..
பெரட்டுக்களத்தினை நோக்கி..
ஓட்டம் பிடிப்போமே…
ஓட்டம் பிடிப்போமே…

நேற்றைய வேலை முடிவின்
இன்றைய நாளின் ஆரம்பத்திற்காய்….!
ஓட்டம் பிடிப்போமே…

அங்கே…
பத்துக்கு பத்து அறைக்குள்ளே
எங்கள் ஊரை பங்குப்போடும்
அதிகாரத்தை
உள்ளங்கையில் வைத்திருக்கும்..
அங்காளி
சின்னதுறை வீற்றிருக்க…
எங்களைப் பங்குப்போடும்…
பங்காளி
கணக்குப்பிள்ளை வீற்றிருக்க….
எங்களது உறவு பாளம்
கங்காணிமார்கள்..
அவர்களை சுற்றி நிற்க..

அரைத்தூக்கத்திலே…
கலர் கலராய் மப்புரல்கள்..
கம்பளியுடன் …
கைகட்டி வேடிக்கை பார்க்குமே
என் சனம் வெளியே நிற்க்குமே….

வேலைக் குறைபாட்டினால்
கருத்துக்கள் முரண்பட்டு…
களம் சூடும் பிடிக்குமே…
எங்கள்..
பிரட்டுக்களம் சூடும் பிடிக்குமே..

இன்றைய நாளுக்காய்…
ஆடப்போகும் ஆட்டத்திற்கு..
ஆரம்பக்களமே… களமே..
எங்கள் பிரட்டுக்களம்..
எங்கள் பெரட்டுக்களம்..

நேற்றைய வேலை நாளின்
குறைகள் கண்டுபிடிக்க…
குற்றங்கள் தொடர..
இன்றைய நாளினிலே
அது எங்கள் மேலதிக வேலைக்காய்..
சிறிய நொடி நாடகம் தொடருமே….!
குரல்கள் சத்தம் ஓங்கி ஒலிக்குமே..!

சின்னதொற கணக்குப்பிள்ளையை ஏச…
கணக்குப்பிள்ளை கங்காணியை ஏச…
கங்காணி என் சனங்களை ஏச….
நாடகம் உச்ச கட்டத்தை அடையுமே..
நாடகத்தில் சிக்கித் தவிப்பது…
ஏனோ ஏனோ
என் சனங்கள் மட்டுமே..

நாடகமோ அமோகமாய்
வருட காலமாய் தொடருதே…?
சூழ்ச்சி வலைசெய்து…
வேலைவாங்கும் சூழ்ச்சி களமே
எங்கள் பிரட்டுக்களம்……
இதுவே எங்கள் பெரட்டுக்களம்…

எங்கள் பிரச்சினைகளுக்கு
நீதிமன்றமாய் அமைந்த களம்..
குறைகளைக் கூறும் களம்…
நிறைகளை நிவர்த்தி செய்யாக்களம்..
என் சனங்களை பிரித்தளிக்கும் களம்…
கட்டளைகளால் அடிமைப்பட்ட களம்..
“அதிகாலை முதல் அந்தி சாயும் வரை
தொழிலாளர்கள் எனும் இயந்திரத்தை
இயக்கும் களம்”
எங்கள் பிராட்டுக்களம்
இதுவே எங்கள் பெரட்டுக்களம்

எங்கள் கூத்துக்கள்…
அரங்கேறும் களம்!
பரம்பரை பரம்பரையாக…
தொடர்ந்து வரும் களம்!
இன்னும்நவீனமாகாக் களம்!
அதிகாரிகளும் பிரதிநிதிகளும்
எங்களை சதுரங்கமாடும் களம்…!
எங்கள் பிராட்டுக்களம்
இதுவே எங்கள் பெரட்டுக்களம்.

அதிகாரங்களை எங்களுக்கு…
போர்வையாக்கும் களம்!
அன்று முதல் இன்றுவரை
அடிமைகள் எனும் என் சனங்கள்
ஒன்றுக்கூடும் களம்!
எங்கள் பிரட்டுகளும்
இதுவே எங்கள் பெரட்டுக்களம்.

எங்கள் உழைப்பினை…
சுரண்டும் களம்..!
உழைப்புக்கேற்ற ஊதியம்..
வழங்காக் களம்…!
ஒப்பந்தங்களால் பிளவுபட்டு..
ஏங்கி தவிக்கும் களம்..!
விடை தெரிந்தும்..
இன்னும் கேள்விக்குறியோடு…
திகழும் களம்..! நிகழ்வு களம்…!
எங்கள் பிரட்டுக்களம்
இதுவே எங்கள் பெரட்டுக்களம்.

நாங்கள்
இன்னும் மையப்புள்ளிதான்
எங்களை
கோர்த்து இன்னும் கோடுகள் கீறிக்கொண்டுதான் செல்கிறார்கள்…
ஆனால்.. நாங்கள் மட்டுமே..
இன்னும் ஆரம்பப்புள்ளியிலேயே..!
இருக்கின்றோமே…கேள்விக்குறியாகி…?

இந்நவீன உலகிலும்
நாங்கள் கிணற்றுத்தவளையா..?
அல்லது….! செக்குமாடா…?
மையமேனும் பெரட்டுகளத்தையே…..
சுற்றி சுழலுகின்றோமே…!
பல கேள்விக்குறிகளோடு…..?
இருநூறு ஆண்டுகளா…???