சுகந்தப் புன்னகையும் சொல்லாத ஒரு பெயரும்
குணாளினி தயாநந்தன்(சாரங்கா)

பாதசாரிகளின் கடவைகளில்
என் வாகனத்தை நிறுத்துகிறேன்.
பாதையைக் கடப்பவர்களின் முகத்தில்
பூக்கிறது ஒரு அபூர்வ புன்னகை.
அதிலிருந்து,
தேவலோக பாரிஜாத மலரின்
மென்சுகந்தம் கிளர்கிறது.
வேறொன்றும் இல்லை.
என்னைத் தான் பிரதிபலிக்கிறார்கள்.
உண்மை ஒன்றை நான்
சொல்லியாக வேண்டும்
எனதந்தப் புன்னகை
அவர்களுக்கான அல்ல.
உதடுகள் விரியும் தருணத்திலே
கனவு மிதக்கும் கண்களை
பிரேரித்து விடுகின்ற
அந்தப் புன்னகையின் தாற்பரியம்
புரியாதவர்களுக்கும் கூட
சொல்வதற்கு ஒன்று உண்டு
தன்னிச்சையாக மலரும் அப்புன்னகை
தமிழ்க்கடைகளில் பூத்துவிடும் பொழுதில்
கடைசியாக இறக்கிய காய்கறிகளையும்
நடுத்துண்டு மீன்களையும்
தொடைத் துண்டு இறைச்சியையும்
உவந்தளிக்க வைத்து விடுகிறது.
வரிசை ஒன்றில் நிற்கும் போது
அது மலர்ந்தால்
“அவசரம் எனின் முன் நகருங்கள்” என
அறியாத எவரையோ கேட்கவைக்கிறது.
ஆள் அரவமற்ற வெளிகளில் சிந்தி
அரட்டை பேச்சுக்களுள் சிதறுமோவென
அச்சம் கொள்ள வைக்கிறது.
“அப் புன்னகை எவருக்கானது?“
என்று கேட்கிறீர்கள்.
உச்சரிக்கும்போதே
உறையவும் தகிக்கவும் வைக்கின்ற
அப்பெயர் ஆனது
ஒருகோடிப் பாடல்களின்
இனிமையைச் சுரப்பது:
யாருமறியாத பூனைப் பாதங்களுடன்
தினமும் மனதில் உலவி
தயக்கமற்ற மயக்கங்களை
மோகிக்க வைப்பது:
நாணச் சிவப்பில் முகம் கவிய
சொல்ல முடியாத தேன் சொல்லை
எழுத ஆரம்பிக்கிறேன்.
விரல்கள் இனிக்கத் தொடங்குகின்றன.
இன்னும் ஒரு கணத்தில்
அப்பெயரை எழுதி விடுவேன்.
மறு கணத்தில் அங்கு மலர்ந்து விடும்,
மென்பாடல்களும் பூக்களும்
புன்னகையும் பெயரும் இணைந்திசையும்
பெரு நேசமும்……………