“நாடகம் கனக்க பேச வேணும். நாடகக்காரர் அல்ல” என்று சொன்னார் நெறியாளர் சாம் பிரதீபன்.
-அகல்யா -

நேற்று இரவு நினைவு முழுதும்
“இது எங்கள் சனம் சேர்ந்து இசைக்கின்ற பாடல்” என்ற பாடலே திரும்பத் திரும்ப கேட்டபடி இருந்தது எனக்கு.
நான் நல்லா நித்திரை கொள்ளக்கூடிய ஒருத்தி. ஆனால் வழமைக்கு மாறாக நேற்று ஐந்து தடவைகளுக்கு மேல் நித்திரை குழம்பி குழம்பி கட்டிலில் புரண்டு புரண்டு கிடந்தேன். விழித்த ஒவ்வொரு தடவையும் அந்தப் பாடல் காதுக்குள் ஒலித்தபடி இருப்பது போலவே இருந்தது.

நேற்று(01.02.2025) இரவு அனலைதீவு மக்களின் அனலை மாலை என்ற ஒன்றுகூடலுக்கு நானும் போயிருந்தேன். அங்கு மேடையேறிய மெய்வெளி அரங்க இயக்கத்தினரின் “கனவுக் தேசம்” நாடகம் பார்த்ததும் அது தந்த உணர்வுமே இதற்கு காரணம் என உணர்ந்ததால் இதை எழுதுகிறேன். “வடை போச்சே” என்பதுபோல் இந்த நாடகத்தால் என் தூக்கம் போச்சே என்றுதான் சொல்ல வேண்டும்.
எல்லாருக்கும் தெரிந்த ஒரு விசயத்தைத் தான் நாடகம் சொன்னது. ஆனா அதை சொன்ன விதம்தான் மனசுக்கு பெரிய சங்கடத்தை தந்திருந்தது. நடிகர்களும் நடித்த முறையும் வசனங்களும் மியூசிக்கும் தெளிவாகக் கேட்ட ஒலியமைப்பும் முழு நாடகத்தையும் இடைஞ்சல் இல்லாம பார்க்க வைத்திருந்தது.
ஊரில் இருப்பவர்கள் வெளிநாட்டை அல்லது இங்கு வாழும் எம்மைப் புரிந்து வைத்திருப்பதற்கும், இங்கிருக்கும் நாம் அவர்களுக்கு கொடுக்கும் எம்மைப் பற்றிய கற்பனைகளுக்கும் இடையே இருக்கிற உண்மைகள் தான் நாடகத்தின் முக்கிய கரு.

வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற மாதிரி நாடகத்தை எழுதியவர் எல்லாரையும் போட்டுத் தாக்கியிருக்கிறார். இங்கிருக்கும் எங்களை ஒரு மாதிரி நக்கல்த்தன்மையாக சொன்னபோது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது. ஆனா யோசிச்சுப் பார்த்தா அதில பெரிய உண்மையும் இருந்ததுதான். மெய்வெளியின் வெளிப்படையான துணிச்சக்கு தலை வணங்கலாம்.
இங்கிருப்பவர்கள் ஆத்திரப்படுவார்கள் கழுவி ஊத்துவார்கள் என்று பூசி மெழுகியது போல நாடகத்தை பார்க்கத் தெரியவில்லை. நாடகத்தை மையப்படுத்தி ஒரு மக்கள் கலந்துரைதாடலாக இது சர்ச்சைக்குட்படவேண்டும் என நெறியாளர் வேண்டுமென்றே நாடகத்தை இப்படி வடிவமைத்தது போலதான் இருந்தது. நாடகத்துக்கு முதல் அவர் ஒரு சிறுகுறிப்பொன்றை மேடையில் சொன்னபோதும்
அப்படி ஒரு சாயலில்தான் பேசியிருந்தார்.

“நாடகம் கனக்க பேச வேணும். நாடகக்காரர் அல்ல” என்று சொன்ன நெறியாளர் சாம் பிரதீபன், “நாடகம் முடிவில் எம்மைப் பாராட்டவோ ஆத்திரத்துடன் திட்டித் தீர்க்கவோ விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை உண்டு. அந்தப் பெரும் கதவை நாம் எப்போதும் திறந்தே வைத்திருக்கிறோம்” என்றார்.
பொதுவாக இங்கு லண்டனில் கலைஞர்களோ புத்தகங்களை வெளியிடும் இலக்கியவாதிகளோ
தமக்கான பாராட்டுகளை மட்டுமே எதிர்பார்க்கின்ற ஒரு விசயம் இருக்கிறது. முதுகு தடவினால் ஏற்றுக்கொள்வார்கள் இல்லையென்றால் குறித்த நபருக்கு தம்மீது எரிச்சல் அல்லது பொறாமை என்பார்கள். ஆனால் இங்கு சாம் பிரதீபன் எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தார். அவர் உண்மையாகத்தான் சொன்னாரா அல்லது மேடைக்காக தான் ஒரு நேர்மையாளன் எனக் காட்ட அப்படிச் சொன்னாரோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

கிட்டத்தட்ட பல்வேறு வயதுடைய பலர் இதில் நடித்திருந்தார்கள். குறிப்பாக ஒரு பத்து பன்ரெண்டு வயதுகளில் இருந்த அந்த சிறுவர்கள் பக்காவாக தமது நடிப்புகளைத் தந்திருந்தார்கள். சரியான பயிற்களுக்கூடாக வந்திருக்கிறார்கள் என்பது பார்க்கவே தெரிந்தது. ஒரு தாயாக நானும் எத்தனையோ பள்ளிக்கூடங்களின் நாடகங்களை பார்க்கப் போயிருக்கிறேன். எனது பிள்ளைகளும் கூட நடித்திருக்கிறார்கள். ஆனால் இப்படி அசத்தலாக நடித்த பிள்ளைகளை லண்டனில் அன்றுதான் நான் கண்டேன். தமிழ் உச்சரிப்பும் உடல் அசைவுகளும் ரசிக்க வைத்தது. பெரியவர்களும் இளைஞர்களும் கூட மிக அழகாக நடித்திருந்தார்கள். ஒரு படம் பார்ப்பதுபோல் காட்சிகள் அடுத்தடுத்து வந்துபோயின.
நாடகத்தில் எனக்குப் பிடித்த ஒரு பகுதி இருக்கிறது. வெளி நாடுகளில் இருந்து அங்குபோகும் எம்மவர்களின் போலிப் புளுகுகள் பற்றி சொன்னபோது அவர்களின் முன்பக்க உடுப்புகள் ஒரு கெத்தாகவும் பின்பக்கம் திரும்பும் போது உடுப்புகள் றியாலிற்றியை காட்டுவது போலவும் இருந்தது. இது தற்செயலாக அமைந்தது போல தெரியவில்லை. திட்டமிட்டே உடுப்புகள் அப்படிப் போடப்பட்டிருந்தது என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது.

உடுப்புகள் மட்டும் அல்ல மேடைக்கு பக்கத்தில் பரலோகம் என்றும் பெரிய மலை என்றும் சொல்லப்பட்ட ஒரு இடத்தில் மேற்குலக நாடுகளின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் மலை என்று சொல்லப்பட்ட அந்த பொருள் மலை போன்ற எண்ணத்தை அச்சொட்டாகத் தரவில்லை என்று குறை சொன்னால் மற்றவர்களை போல் சாம் பிரதீபனுக்கும் கோபம் வருமோ என்னவோ தெரியாது. மனசில் பட்டதை சொன்னேன்.

ஊரில் படிக்காமல், உற்சாகமாக உருப்படியாக ஏதும் செய்யாமல், இப்போதும் வெளிநாடு என்ற கனவுத் தேசம் பற்றி அதிகமான கற்பனைகளோடு, வந்தால் வெளிநாடு வருவேன் அல்லது சோம்பேறியாய் படுத்துக்கிடப்பேன் என்று இருக்கும் பேர்வழிகளுக்கு இது மாயத்தேசம் என்ற கருத்தை தூக்கி எறியும் இதன் கதையாசிரியரிடம், அந்த மாயத் தேசத்தில் இருந்து இன்னமும் நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? என்று அங்குள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கல்வியை நிராகரித்துவிட்டு வெறும் காசு உழைக்கும் தேவைக்கு அல்லது வெளிநாடு என்ற பில்டப்புக்கு இங்கு வரத்துடிக்கும் எல்லோரும் பார்க்கவேண்டிய ஒரு நாடகம் இது என்பதை நாடகம் முடிவில் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டியதில் இருந்து அறிய முடிந்தது.
கலைஞர்கள் எல்லோருக்கும் பாராட்டுகள்.



