புதிதாக வெடிப்புகள், A13 வீதி திறப்பது மேலும் தாமதமாகும்.

எப்போது என்று முடிவில்லை

Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிஸ் நகருக்கு அருகே ஏ9 நெடுஞ்சாலையில் மூடப்பட்டிருக்கின்ற வீதிப் பகுதியை மீண்டும் பாவனைக்குத் திறப்பது மேலும் தாமதமாகலாம். முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று மே மாதம் முதலாம் திகதி அந்த வீதி வழியே வாகனப் போக்குவரத்துகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என்று அறிவிக்கப்படுகிறது.
தலைநகர் பாரிஸில் இருந்து வடக்கே நோர்மன்டி வரை செல்லுகின்ற இந்த நெடுஞ்சாலையில் பாரிஸ் சென் குளூட் (Saint-Cloud) – வோக்கிரசோன் (Vaucresson-Hauts-de-Seine) ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தரை நகர்வு காரணமாக வீதியில் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால் வீதியின் அந்தப் பகுதி ஊடான இரு மார்க்கப் போக்குவரத்துகள் கடந்த 18 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
ஏற்கனவே காணப்பட்ட வெடிப்புகள் பரிசோதிக்கப்பட்டுவந்த நிலையில் தற்சமயம் மேலும் புதிய வெடிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
வீதிக்கு அடியே தரையில் ஏற்பட்டுள்ள சரிவுகள் திருத்த வேலையை ஆரம்பிப்பதற்கு இடமளிக்குமா என்பதை இல்-து-பிரான்ஸ் பெருந் தெருக்கள் திணைக்களத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலைமையில் வீதியை எப்போது போக்குவரத்துக்குத் திறக்க முடியும் என்ற கால வரம்பை இப்போதைக்குத் தீர்மானிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீதியைத் திறக்கின்ற ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
பாரிஸ் சுற்றுவட்டப் பாதையில் இணைகின்ற இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டிருப்பதால் இல் – து-பிரான்ஸ் பிராந்திய வாகன சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டி இருப்பதால் கால விரையங்கள் ஏற்பட்டுள்ளன. வீதிக் கட்டணங்களைச் செலுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
வீதியின் முக்கிய பகுதி மூடப்பட்டிருப்பதால் எஞ்சிய பாகத்தில் பெரும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த திங்களன்று 350 கிலோ மீற்றர்கள் நீளத்துக்கு நெரிசல் காணப்பட்டது.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">