பாரிஸ் நகரின் சில இடங்களுக்குச் சென்றுவர QR Code.. மே 10 முதல் அரச இணையத் தளத்தில் பதிவு ஆரம்பம்

தொழில்களுக்காக வருவோர், வசிப்பிடங்களில் தங்குவோர், பாஸ் இன்றி நடமாட முடியாது

Kumarathasan Karthigesu-பாரிஸ்

ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாகப் பாரிஸ் நகரின் சில இடங்களில் வசிப்போர் மற்றும் அந்தப்பகுதிகளுக்குச் சென்று வருவோர் விசேட பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஒலிம்பிக் ஆரம்ப விழா நடைபெறவுள்ள செய்ன் நதிப் பகுதிகள் மற்றும் போட்டிகள் இடம்பெறுகின்ற முக்கிய இடங்களைச் சுற்றிவர நிறுவப்படவுள்ள சிவப்புப் பாதுகாப்பு வலயங்களுக்குள்(red zones) சென்று வருவதற்கே கீயூஆர் கோட்டுடன் (QR code system) கூடிய இந்த இலத்திரனியல் பாஸ் கட்டாயம் ஆகும்.
பாதுகாப்பு வலயங்களுக்குள் வதிவிடங்களைக் கொண்டவர்கள், அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகத் தங்கி இருப்போர், உல்லாசப் பயணிகள் மற்றும் அங்கு தொழில் நிமித்தம் தினசரி சென்றுவர வோண்டியவர்கள் அனைவரும் கியூஆர் கோட் இன்றி பொலீஸ் சோதனை நிலையங்களைத் தாண்டிச் செல்ல முடியாது.
சுமார் இரண்டு லட்சம் பேர்வரை இந்த இலத்திரனியல் பாஸைப் பெற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருப்பர் என்று உள்துறை அமைச்சு மதிப்பிட்டுள்ளது.
மே 10 ஆம் திகதி முதல் செயற்படவுள்ள அரச இணையத் தளம் ஒன்றில் விவரங்களைப் பதிவு செய்வதன் மூலம் இந்தக் கியூஆர் கோட்டைப் பெற்றுக் கொள்ள முடியும். பெயர் மற்றும் விவரங்களை உள்துறை அமைச்சு பரிசீலனை செய்யும். அதன் பின்னர் கியூ ஆர் கோட் சம்பந்தப்பட்டவர்களது கைத் தொலைபேசிகளுக்கு நேரடியாகக் கிடைக்கும். ஒலிம்பிக் காலத்தில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதிகளில் நடமாடுவோர் தங்களது பயணங்களை இலகுவாக்குவதற்கும் அதுதொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் “JOPtimiz”என்ற பெயரில் செயலி (app) ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.