பிரியங்கா காந்தி பிரதமராவதற்கு முகராசி உள்ளது-மன்சூர் அலிகான்.
பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார்.
நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில தலைவர் சொல்வபெருந்தகையை சந்தித்து, தான் காங்கிரஸில் இணைய உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளார். தனது விருப்பம் தொடர்பாக அவர் கடிதம் ஒன்றையும் செல்வபெருந்தகையிடம் அளித்துள்ளார்.
இந்திய ஜனநாயக புலிகள் எனும் கட்சியின் தலைவராக மன்சூர் அலிகான் இருந்து வருகிறார். இந்த கட்சி சார்பாக வேலூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார் மன்சூர் அலிகான். இப்படியான சூழலில், தற்போது தான் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக அதிரடி முடிவை அறிவித்துள்ளார். அப்போது பேசுகையில், நாட்டின் பிரதமராக வருவதற்கு பிரியங்கா காந்திக்கு முகராசி உள்ளது எனவும் கூறி அதிரவைத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து தனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரஸுடன் இணைக்க உள்ளதகவும், ராகுல் காந்தி முன்னிலையில், தான் காங்கிரஸில் இணைய உள்ளதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு செல்வப்பெருந்தகை, தற்போது தேர்தல் சமயம் என்பதால் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைய முடியாது. தேர்தல் முடிந்த பின்னர் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், நான் 15 வருடத்திற்கு முன்னரே காங்கிரஸ் கட்சியில் இணைந்து தான் செயல்பட்டு வந்தேன். பிறகு கட்சி நிர்வாகி ஒருவருடன் முரண்பாடு ஏற்பட்டதால் காங்கிரசில் இருந்து விலகினேன். பின்னர், இந்திய ஜனநாயக புலிகள் எனும் கட்சியை ஆரம்பித்தேன். பின்னர் எனது சொந்த காசை போட்டு தேர்தல்களை சந்தித்து வந்தேன்.
வேலூரை தவிர மற்ற எல்லா இடத்திலும் இந்தியா (I.N.D.I.A) கூட்டணிக்கு ஆதரவு என்று தான் நான் பிரச்சாரம் செய்து வந்தேன். இந்தியாவின் பிரதமராக வருவதற்கு சோனியா காந்தி புதல்வி பிரியங்கா காந்திக்கு முகராசி இருக்கிறது. அவரை அடுத்து ராகுல் காந்திக்கும் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது என கூறினார் மன்சூர் அலிகான்.
மேலும் பேசிய அவர், 10 வருடங்களாக பிரதமர் மோடி நாட்டிற்கு எதுவுமே செய்யவில்லை. வேலைவாய்ப்பு இல்லை. தனது பேச்சு மூலம் மதக்கலவரம் ஏற்படுத்த பார்க்கிறார். வெளிநாட்டு சதிகள் மூலம் தன்னை கொலை செய்ய பார்ப்பதாக பொய் கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என பிரதமர் மீதான விமர்சனத்தையும் மன்சூல் அலிகான் முன்வைத்துள்ளார்.