பிரபல பாடகர் துவக்குச் சூட்டில் படுகாயம்!
கொலை முயற்சியா? விபத்தா? குழப்பம்!!
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பிரான்ஸில் மிகச் சிறந்த அழகிய குரல் தெரிவுக்கான”த வொய்ஸ்” (The Voice : La Plus Belle Voix) தொலைக்காட்சிப் போட்டித் தொடரின் மூலம் பிரபலமான இளம் பாடகர் கென்ட்ஜி ஜிராக் (Kendji Girac) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் நெஞ்சில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார்.
போர்தோ நகரத்தில் உள்ள போதனா மருத்துவமனையில் அவருக்கு அவசர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டார் என அறிவிக்கப்படுகிறது.
நாட்டின் தென் மேற்கே லோன்ட்(Landes) மாவட்டத்தில் Biscarrosse என்ற நகரில் சுற்றுலாப்பயணிகள் தங்குகின்ற ஒரு பகுதியில், ஞாயிறு – திங்கள் இரவு நேரத்தில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. சம்பவம் இடம்பெற்ற வேளை அங்கே பாடகரது உறவினர்கள் உட்படப் பலர் கரவன்களில் (caravans) தங்கியிருந்துள்ளனர். அவர் எவ்வாறு சூட்டுக்கு இலக்கானார் என்பது பற்றிய தகவல்களில் குழப்பம் நிலவுகிறது.
பாடகர் கென்ட்ஜி ஜிராக் காயமடைந்த பின்னர் சுயநினைவுடன் இருந்த போது “மிக அண்மையில் சந்தை ஒன்றில் வாங்கிய துப்பாக்கியைப் பரீட்சித்துப் பார்த்தபோது அது தவறுதலாக வெடித்ததினாலேயே தான் காயமடைய நேரிட்டது” என்ற தகவலைக் கூறியிருக்கிறார். காலையில் சம்பவம் நடந்த இடத்தில் சோதனை நடத்திய பொலீஸார் அங்கு புதருக்குள் கிடந்த தானியங்கி பிஸ்டல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அதில் ரவைக் கூடு காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் கலிபர் ரகத் தானியங்கிக் கைத் துப்பாக்கியை (11 caliber automatic pistol) அவர் எதற்காக வாங்கினார், ஏன் அந்த நள்ளிரவு நேரத்தில் அதனைப் பரீட்சித்துப் பார்க்க முற்பட்டார் என்பன போன்ற கேள்விகள் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன.
மூன்று வயதுப் பெண் குழந்தையின் தந்தையான அவரது துணைவியாரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
கென்ட்ஜி இது ஒரு விபத்துச் சம்பவம் என்று சாட்சியமளித்துள்ள நிலையிலும் அரச வழக்கறிஞர் அலுவலகம் இது ஒரு “தன்னார்வக் கொலை முயற்சி” என்ற அடிப்படையிலேயே விசாரணைகளைத் தொடக்கியுள்ளது.
ஸ்பெயினைப் பூர்வீகமாகக் கொண்ட 27 வயதான பாடகர் கென்ட்ஜி, ஐரோப்பா எங்கும் பரந்து வாழும் ஜிப்சி(gypsy) நாடோடிகள் சமூகத்தைச் சேர்ந்தவர்.
TF1 தொலைக்காட்சியில் 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பான “த வொய்ஸ்” (The Voice : La Plus Belle Voix) நிகழ்ச்சி மூலம் நாடெங்கும் பிரபலமான அவர் நூற்றுக்கு மேற்பட்ட இசை அல்பங்களை வெளியிட்டிருக்கிறார். அவர் காயமடைந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள மில்லியன் கணக்கான அவரது ரசிகர்கள் அனுதாபச் செய்திகளால் சமூக ஊடகங்களை நிறைத்து வருகின்றனர்.