ஒலிம்பிக் ஜோதி மே 8 ஆம் திகதி பாய்மரக் கப்பலில் மார்செய் வந்தடையும்

ஒன்றரை லட்சம் பேர் வரவேற்கத் திரள்வர்

படம் :பிரபல கிரேக்க நாட்டு நடிகை மேரி மினா (Mary Mina) முக்கிய பங்காளராகக் கலந்து கொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினார்.

பாரம்பரிய முறைப்படி கிரேக்கத்தில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம் அங்கிருந்து நீண்ட பயணங்களுக்குப் பின்னர் பிரான்ஸுக்கு வந்து சேரவுள்ளது.
கிரேக்கத்தில் ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடமாகிய ஒலிம்பியாவில் கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தீபத்தை முறைப்படி ஏற்றிவைக்கின்ற உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெற்றது. ஒலிம்பியாவில் 2,600ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹேரா ஆலயத்தின் எச்சங்கள் காணப்படும் இடத்தில் தீபத்தை மூட்டி ஒளிரச் செய்கின்ற நிகழ்வுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பாக் (Thomas Bach) தலைமை வகித்தார். கிரேக்க ஜனாதிபதி கத்தரினா சகெல்லரோபௌலோ(Katerina Sakellaropoulou) பிரெஞ்சு விளையாட்டு அமைச்சர் அமேலி ஓடியா-காஸ்டெரா (Amélie Oudéa-Castéra) மற்றும் பாரிஸ் மேயர் ஆன் கிடல்கோ(Anne Hidalgo) உட்படப் பிரமுகர்கள் அந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஒலிம்பிக் ஜோதி கிரேக்க நாட்டில் பதினொரு தினங்கள் சுமார் 5,000 கிலோமீற்றர்கள் தூரத்துக்கு 600 வீரர்களால் சுமந்து செல்லப்படவுள்ளது.

பிரான்ஸில் இன்னமும் எஞ்சியுள்ள இரும்பு மற்றும் மரத்தினாலான “பெலெம்”(Belem) எனப்படுகின்ற பண்டைய பாய்மரக் கப்பலில் ஏப்ரல் 27 ஆம் திகதி ஏற்றிவரப்படவுள்ள தீபச் சுடர் எதிர்வரும் மே எட்டாம் திகதி தென்பகுதித் துறைமுக நகரமான மார்செய்யை(Marseille) வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு தீபத்தை வரவேற்கும் நிகழ்வில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் உட்பட சுமார் ஒன்றரை லட்சம் பேர் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்செய் வந்தடைந்ததும் தீபச் சுடர் பின்னர் அங்கிருந்து பிரான்ஸின் பெருநிலப்பரப்பிலும் கடல் கடந்த நிர்வாகத் தீவுகளிலும் சுமார் 12 ஆயிரம் கிலோமீற்றர்கள் தூரத்துக்கு அஞ்சல் ஓட்டத்தின் மூலம் எடுத்துச் செல்லப்படும். இந்த நீண்ட பயணத்தில் சுமார் நானூறு நகரங்கள் மற்றும் உல்லாசப்பயண மையங்கள் ஊடாகத் தீப்பந்தம் சுமந்து செல்லப்படவுள்ளது.

கடைசியாக ஜூலை 26 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா திட்டமிடப்பட்டுள்ள பாரிஸ் நகரின் மையத்தை அது வந்தடையும்.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">