ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு.

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இம்மாதம் 24ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.உமா ஓயா திட்டத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழாவில் கலந்துகொள்ளவே அவர் இலங்கை வரவுள்ளார்.

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகைக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரிகள் அரசாங்கத்திடம் தமது ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர்.அத்துடன், இலங்கையில் உள்ள இஸ்ரேல் தூதரகமும் அரசாங்கத்திடம் இந்த விடயம் தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்துக்கு முன்னதாக, ஈரானிய பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளது. ஈரான் ஜனாதிபதி வருகை தரும் விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட உள்ளதுடன், பலத்த பாதுகாப்புடன் உமாஓயா திட்டத்தை திறந்துவைக்க ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அழைத்துச் செல்லப்பட உள்ளார். நிகழ்வு முடிந்த பின்னர் இருதரப்பு சந்திப்புகளின் பின் அன்றைய தினமே இப்ராஹிம் ரைசி, திரும்பிச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பால் இலங்கை இராஜதந்திர ரீதியில் கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.கடன் மறுசீரமைப்பு உட்பட வங்குரோத்து நிலைக்குச் சென்றிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் பின்புலத்தின் மேற்குலத்தின் எதிரியாக கருதப்படும் இப்ராஹிம் ரைசிக்கு இலங்கையில் செங்கம்பள வரவேற்பளித்தால் அது இந்தச் செல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் இலங்கைக்கு சர்வதேச நெருக்கடிகளை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.