டுபாய் சென்ற விமானங்கள் வெள்ளத்தால் திசைதிரும்பின!
சர்வதேச வான்தளம் நீரில் மிதக்கின்றது!!
Kumarathasan Karthigesu-பாரிஸ்
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் டுபாயில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் கடும் மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் சர்வதேச விமான சேவைகள் ஸ்தம்பிதமடைந்தன.
வளைகுடாவைத் தாக்கிய அடை மழை பாலைவனத் தேசமாகிய அமீரகத்தின் பல பகுதிகளை வழமைக்கு மாறாக வெள்ளக்காடாக்கியிருக்கிறது.
உலகின் மிகப் பெரியதும் நெருக்கடி நிறைந்ததுமான சர்வதேச விமான மையத்தில் ஏற்பட்ட தடைதாமதங்கள் காரணமாக விமானங்கள் கிளம்புவதும் இறங்குவதும் சுமார் இரண்டு மணி நேரம் தடைப்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது. சேவைகளில் ஏற்பட்ட தாமதங்கள், தடைகள் காரணமாக பெரும் எண்ணிக்கையான பயணிகள் விமான நிலையத்தின் உள்ளே முடங்க நேர்ந்தது. வீதிகளில் வெள்ளம் நிறைந்ததால் டக்ஸி உட்பட வாகனப் போக்குவரத்துகளும் தடைப்பட்டன. நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த புயல் மழைப் பாதிப்பு இன்று புதன் கிழமை காலை வரை நீடித்தது. நாடு முழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமை வீடுகளில் இருந்து வேலை செய்யுமாறு அரச ஊழியர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
அமீரகத்தின் சில பகுதிகளில் 24 மணிநேரத்தில் எண்பது மில்லி மீற்றர் (3.2 inches)மழை பதிவாகியது. அங்கு அண்ணளவான வருடாந்த மழை வீழ்ச்சி 100 மில்லிமீற்றர்கள் ஆகும்.