தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தகவல்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக தமிழ் நாட்டில் 39 மற்றும் புதுச்சேரி 1 என மொத்தம் 40 தொகுதிகளில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஒருபக்கம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி-வோட்டர் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. அதில், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கணக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மறுபுறம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது எனவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 30 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும், மீதமுள்ள 9 இடங்களில் காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, ஐ.யு.எம்.எல்., மற்றும் கே.எம்.டி.கே ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய திமுக தலைமையிலான கூட்டணி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக இந்த தேர்தலில் பெரும் சவால்களை சந்திக்கும் என்றும் இந்த கணிப்புகள் உண்மையானால் வரும் மக்களவையில் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக திமுக மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.