மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 6 நாட்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக
உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதேசமயம் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகத்துக்கு வருகை தந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மக்களவை தேர்தல் பரப்புக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழ்நாடு வருகிறார். காங்கிரஸ் உட்பட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை கோவையில் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதற்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கும் பிரச்சார கூட்டத்தில் சிவகங்கை, மதுரை, தென்காசி மற்றும் தூத்துக்குடி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட பின் கோவை செல்கின்றனர். இதனிடையே, கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன், திமுக வேட்பாளர் ஆ.ராசா ஆகியோரை ஆதரித்து திருப்பூர் மற்றும் நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதுபோன்று மற்ற கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் தமிழ்நாட்டின் தேர்தல் களம் என்பது பரபரப்பாக காணப்படுகிறது.