ஐக்கிய மக்கள் சக்தியில் கொள்கை அன்றி வெறுப்பு தான் உள்ளது-ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவுடன் பணியாற்றி, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கீழ் கட்சியைப் பாதுகாத்து, ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவுடனும் இணைந்து செயற்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரதமராகி, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைப் பாரம்பரியத்துடன் நாட்டின் தலைமைப் பதவிக்கு தான் வந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தி ஐக்கிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பினார் எனவும், அவரது தந்தையின் ஆட்சியில் கட்சி பிளவுபட்ட போது கட்சியைப் பாதுகாத்தவர் என்றவகையில் கட்சி பிளவுபட்டதற்கு வருந்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (07) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுவதற்கு இடமளிக்காமல் இருந்திருந்தால், ஐக்கிய தேசியக் கட்சி இன்று பலமான கட்சியாக முன்னேறியிருக்கும் எனவும், கட்சியைப் பிளவுபடுத்தி, உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு ஜனாதிபதி பதவி வழங்கியதன் காரணமாக மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்களுடன் இணைந்து பிரதமர் பதவியை ஏற்கத் தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று கொள்கை அன்றி வெறுப்பு தான் உள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாது எனவும் இன்றைய காலத்தின் உண்மையான தேவை நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது தான் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்