3 ஆண்டுகளில் 45 முறை வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக்.
மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லியில் கடந்த மாதம் சோதனை செய்ததில் 50 கிலோ சூடோபெட்ரின் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பவர் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தியதாகக் கூறப்படும் சர்வதேச போதைப் பொருள் கும்பலின் மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக் பலகட்ட தேடுதலுக்குப் பிறகு கடந்த மார்ச் 9-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஜாபர் சாதிக்கை (36) தற்போது என்.சி.பி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
உணவுப் பொருட்கள் என்ற போர்வையில் போதைப் பொருள் கடத்தி வந்துள்ளனர். ஹெல்த் மிக்ஸ் பவுடர், காய்ந்த தேங்காய் போன்று உணவுப் பொருட்கள் என்ற போர்வையில் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அதிகாரிகள் அளித்த தகவலை அடுத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
பிப்ரவரி நடுப் பகுதியில், என்.சி.பி மற்றும் டெல்லி காவல்துறை மேற்கு டெல்லியில் உள்ள பசாய் தாராபூரில் உள்ள Aventa என்ற நிறுவனத்தின் ஒரு குடோனில் சோதனை செய்தனர். அங்கு மல்டிகிரைன் உணவு கலவையின் ஒரு கவர் சரக்குகளில் மூன்று பேர் சூடோபெட்ரைனை பேக் செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் 50.070 கிலோ சூடோபெட்ரின் போதைப் பொருளை பறிமுதல் செய்ததுடன், 3 பேரை கைது செய்தனர். இவர்கள் 3 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்கு 45 முறை போதைப் பொருள் அனுப்பியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில், 3,500 கிலோ சூடோபெட்ரைன் கடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சாதிக்கின் கூட்டாளியான சதா கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் போதைப் பொருளை பேக் செய்து வந்துள்ளார். இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என என்.சி.பி வட்டாரங்கள் தெரிவித்தன.