குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் அமுலாகாது! ஈழத் தமிழர்களுக்கு பாதிப்பு – ஸ்டாலின்
“ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது. இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்துக்கும் தமிழ் நாடு அரசு இடம் கொடுக்காது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் ஒன்றிய பா. ஜ. க. அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்திட அவசரகதியில் நேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, பலவகையான மொழி, இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய்த் திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச் சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும். அதுமட்டுமல்ல சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச்சட்டம்.
எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்துக்கம் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
முன்னதாக, சி. ஏ. ஏ. எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இது தொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.