எனது கணவரின் மரணத்திற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் – மனைவி குற்றச்சாட்டு

எனது கணவரின் சாவிற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என உயிரிழந்த இளைஞனின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
காரைநகர் பகுதிக்கு கணவன் மனைவி சென்று விட்டு திரும்பும் வழியில் , கணவன் மனைவியை கடத்தி சென்ற வன்முறை கும்பல் கணவனை படுகொலை செய்துள்ளது.

இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில் , காரைநகருக்கு சென்று விட்டு , மோட்டார் சைக்கிளில் நானும் எனது கணவரும் வீடு திரும்பும் வேளையில் , பொன்னாலை பாலத்திற்கு அருகில் எம்மை வழிமறித்த கும்பல் வாகனத்தில் எம்மை கடத்த முயற்சித்தனர். அவ்வேளை , நானும் கணவரும் அவர்களிடம் தப்பித்து அருகில் இருந்த கடற்படை முகாமிற்குள் தஞ்சம் புகுந்தோம். கடற்படையினர் எம்மை அங்கிருந்து விரட்டினார்கள்.

” எங்களை கடத்த போறாங்க , எங்களை காப்பாற்றுங்க ” என கடற்படையிடம் மன்றாடினோம். ஆனால் அவர்கள் எங்களை முகாமில் இருந்து துரத்தினார்கள் அவ்வேளையிலே எம்மை அவர்கள் வாகனத்தில் கடத்தி சென்றனர். கடற்படையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டு , எமக்கு அடைக்கலம் கொடுத்து இருந்தால் , எனது கணவரின் உயிர் பிரிந்திருக்கது. எனது கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு விதத்தில் காரணம் என தெரிவித்தார்.

அதேவேளை , கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காது இருந்தாலும் , தமது முகாமிற்கு அருகில் வாகனத்துடன் நின்ற கும்பலை துரத்தி விட்டு , இவர்களை அனுப்பி வைத்திருக்கலாம். அல்லது வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருக்கலாம். கடற்படையின் கண் முன் இருவரை வாகனத்தில் வந்தவர்கள் கடத்தி சென்ற போதும் கடற்படையினர் அதனை தடுக்கவோ , கடத்தல் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்காமை இருந்தமை கடற்படை மீதும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது என உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை வட்டுக்கோட்டை இளைஞனை சித்திரவதைக்கு உற்படுத்தியே படுகொலை செய்துள்ளனர் என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் சென்று விட்டு , வீடு திரும்பி கொண்டிருந்த கணவன் மனைவியை பொன்னாலை பாலத்திற்கு அருகில் இரு வாகனங்களில் காத்திருந்த வன்முறை கும்பல் கடத்தி சென்று , கணவனை தாக்கி படுகாயங்களை ஏற்படுத்திய நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக வீசி சென்று இருந்தனர். மனைவியை சித்தங்கேணி பகுதியில் வீதியில் இறக்கி விட்டு தப்பி சென்று இருந்தனர்.

படுகாயங்களுடன் வீசப்பட்ட இளைஞனை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.

அதன் போது , இளைஞனின் உடல்களில் வெட்டு காயங்கள் , கூரிய ஆயுதங்களால் குத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிய காயங்களாலும், மூச்சு குழாய்க்குள் இரத்தம் சென்றதாலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் இளைஞனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இளைஞனை கடத்தி படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார் , ஆட்களற்ற வீடொன்றின் வளவினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் வைத்து , கணவன் – மனைவி இருவரையும் இரு வாகனங்களில் வன்முறை கும்பல் ஒன்று கடத்தி சென்று , கணவனை தாக்கி படுகாயமேற்படுத்தி வைத்தியசாலை முன்பாக வீசி சென்ற நிலையில் , மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கி விட்டு தப்பி சென்று இருந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸ் குழுக்கள் முன்னெடுத்து வரும் நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் தலைமறைவாக இருந்த யாழ்ப்பாணம் – அராலி பகுதியை சேர்ந்த நால்வரை கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் ஆட்களற்ற வீடொன்றின் வளவினுள் அநாதரவாக கார் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் காரினை மீட்டுள்ளனர்.

காரினுள் இரத்த கறைகள் , கொட்டன்கள் , காணப்பட்டுள்ளன. காரினுள் வைத்தே இளைஞனை சித்திரவதை செய்து படுகாயங்களை ஏற்படுத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.