வெள்ளைக் கொடி ஏந்திப் பேச்சுக்குச் செல்வதும் துணிவே! உக்ரைன் அரசிடம் புனித பாப்பரசர் வேண்டுகோள்!!

சரணடையோம்! கடந்தகால வெள்ளைக் கொடி வரலாறு நாம் அறிவோம்!-கீவ் பதிலடி

 
வத்திக்கானில் புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் அளித்துள்ள செவ்வி ஒன்றில், போர்க்கள நிலைமைகள் மோசமடைவதற்கு முன்னராக ரஷ்யாவுடன் சமாதானப் பேச்சுக்குச் செல்லுமாறு உக்ரைன் அரசிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
பாப்பரசர் பிரான்சிஸின் செவ்வி சுவிற்சர்லாந்தின் ஆர்எஸ்ஐ(RSI) தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது. அதில் அவரிடம் உக்ரைன் போர் நிலைவரம் குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் –
“நிலைமை மோசமடைவதற்கு முன்பாகப் பேச்சுவார்தைக்குச் செல்ல வெட்கப்பட வேண்டாம். சமாதானப் பேச்சு என்ற வார்த்தை மிகவும் வலிமை வாய்ந்தது..
“சூழ்நிலையைப் பார்த்து, மக்களைப் பற்றிச் சிந்தித்து, வெள்ளைக் கொடியை உயர்த்திப் பேச்சுவார்த்தை நடத்தும் தைரியம் உள்ளவர்களையே வலிமையானவர்கள் என நான் நம்புகிறேன்,” – என்று கூறியிருக்கின்றார் .

Kumarathasan Karthigesu-பாரிஸ்

உலகக் கத்தோலிக்கர்களின் உயர் தலைவரான புனித பாப்பரசரது இந்த வேண்டுகோளைக், கீவ் அரசு உடனடியாகவே நிராகரித்திருக்கிறது.

” ஒருபோதும் சரணடையோம்.. மஞ்சள் மற்றும் நீலமே எங்கள் கொடி. அந்தக் கொடிக்காகத் தான் வாழ்கின்றோம். உயிரிழக்கின்றோம். வெற்றி பெறுகின்றோம். வேறு கொடிகளை உயர்த்த மாட்டோம்”-என்று உக்ரைனின் உயர்மட்ட ராஜதந்திரி ஒருவர் உடனேயே தனது சமூக ஊடகப் பதிவில் எழுதியிருக்கிறார்.
இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் பின்பற்றிய வத்திக்கானின் வெள்ளைக் கொடி உத்தியை நாமறிவோம். கடந்தகாலத் தவறுகளை மறுபடியும் செய்வதைத் தவிருங்கள்.
உயிர் வாழப் போராடுகின்ற உக்ரைன் மக்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்-என்று அந்த ராஜதந்திரி பாப்பரசரது கூற்றுக்கு வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பதில் வழங்கியிருக்கிறார்.
போர்க் கள நிலைமை உக்ரைனுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் திசைக்கு நகர்கின்ற அறிகுறி தென்படுகின்றது என்று அவதானிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் உக்ரைன் படைகளது முன்னரங்குகள் பலவீனமடைந்துள்ளன. இதனால் கிழக்கு நகரங்கள் பலவும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினுள் அகப்படும் ஆபத்துத் தோன்றியுள்ளது.
உக்ரைன் தரப்பில் ஆள் பலமும் ஆயுத பலமும் சவாலாக மாறிவருகின்றன. இந்த நிலையில் ஐரோப்பாவின் தரைப் படைகளைத் தேவைப்பட்டால் அங்கு அனுப்புவதை மறுக்க முடியாது என்று பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் அண்மையில் வெளியிட்ட கருத்து போர்க்களத்தில் மேற்குலகம் பலவீனமடைவதன் அறிகுறியைக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேசமயம், பிரான்ஸ் தனது போராயுதத் தொழிற்சாலைகள் சிலவற்றை அடுத்துவரும் நாட்களில் உக்ரைன் மண்ணில் இயக்கவுள்ளது என்ற தகவலைப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
போரில் பிரான்ஸின் நேரடித் தலையீடுகள் அதிகரித்துள்ளன. சிவப்புக் கோடுகள் அனைத்தையும் அது தாண்டி விட்டது என்று மொஸ்கோ கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருப்பது தெரிந்ததே.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">