பிரிட்டன் பிரதமர் ரிஷி சுன்க் மாமியாருக்கு இந்தியாவில் எம்பி பதவி.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரபல கல்வியாளரும், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தியை குடியரசுத் தலைவர் நியமனம் செய்திருப்பதை சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமரின் பதிவில், சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் சுதா மூர்த்தியை மாநிலங்களவை எம்பியாக நியமித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சமூகப் பணி, தொண்டு சேவை மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் அனைத்து பெண்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.
மாநிலங்களவையில் அவரது வரவு, நமது மகளிர் சக்திக்கு ஒரு பெரிய சக்திவாய்ந்த சான்றாகும். இது நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் திறனை எடுத்துக்காட்டுகிறது. எனவே, சுதா மூர்த்தியின் நாடாளுமன்ற பதவிக்காலம் மிக்க பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள சுதா மூர்த்தி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.