கொஞ்சம் உயிர்த்து வா!


ஒரு தோழியின் உயிர்ப்புக்காய்
பெரும்
பிண மேட்டருகே
நீண்ட நாட்களாய் காத்திருப்பவன் நான்!

உயிர்ப்பு!
மரணத்தின் பின் நிகழும்
ஒரு மீள் பிறப்பு.
இழப்பின் பின் கிடைக்கும்
ஒரு மீளப் பெறுகை.
தோல்விக்குப் பின் எழும்
ஒரு புதிய முயற்சி.
சரிவின் பின் தொடங்கும்
இன்னுமோர் எழுகை.
வீழ்ச்சிக்குப் பின் நடக்கும்
மற்றுமோர் எழுச்சி.
அஸ்தமனத்தின் பின் வரும்
புதியதோர் உதயம்.

மரணத்துக்கும் ஜனனத்துக்கும்
வேறுபாடு தெரிந்துகொள் என் தோழியே!
இறப்புக்கும் பிறப்புக்கும்
மாறுபாடு அறிந்து கொள் என் சகியே!
முட்டை
வெளியே இருந்து உடைக்கப்பட்டால் மரணம்.
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் ஜனனம்.

தங்கள் முட்டைகளை
உள்ளிருந்து உடைக்க முடிந்தவள்
வரட்டும்,
நாங்கள் கைகுலுக்கிக்கொண்டு புறப்பட
ஒரு மயான மேட்டில்
நீண்ட நாட்களாய் காத்திருப்பவன் நான்.
கொஞ்சம் உயிர்த்து வா!
ஒரு தோழியின் உயிர்ப்புக்காய்
பெரும்
பிண மேட்டருகே
நீண்ட நாட்களாய் காத்திருப்பவன் நான்!

– சாம் பிரதீபன் –