இலங்கை – இந்திய கடல் எல்லையில் வெடிக்கவுள்ள போராட்டம் – தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் அழைப்பு.

இந்திய இழுவை படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை  ஞாயிற்றுக் கிழமை இலங்கை கடல் எல்லையில் முன்னெடுக்கப்படவுள்ள கறுப்புக்கொடி போராட்டத்திற்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் கலந்துகொள்ளுமாறு யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவரான சிறிகந்தவேல் புனித பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை,  யாழ் மாவட்டம்,  காங்கேசன்துறை, தீவகம், வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளிலுள்ள மீனவ சங்கங்கள் மற்றும் ஒன்றிணைந்து அந்தந்த பகுதிகளில் இப் போராட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளது. அதேவேளை, யாழ் மாவட்ட கூட்டுறவு சம்மேளனமும் யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனமும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். யாழ் மாவட்டத்திலுள்ள படகுகள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதுடன், அதிலே கணிசமான படகுகள் எமது இலங்கை கடற்பகுதியில் இந்திய எல்லைப் பகுதியை முற்றுகையிட்டு போராட்டத்தை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளளோம்.

ஏனைய படகுகள் அந்தந்த பிரதேசங்களிலுள்ள கடல் எல்லை பகுதிகளில் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும். கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்படவுள்ள இப் போராட்டத்திற்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கோரி நிற்பதோடு, கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை பெறுவதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் ஆதரவு தரவேண்டும்’ எனவும் தெரிவித்தார்.