ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவார்-ரவி கருணாநாயக்க.

ஒக்டோபர் மாதம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் விரிவான கூட்டணி அமைக்க இருக்கிறோம். அதில்  ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவார் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (25) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், நாட்டை மீட்பதற்குத் தனி ஒரு கட்சியால் முடியாது. அனைவரின் ஒத்துழைப்பு அவசியமாகும். அதனால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்ய முடியுமான அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்துக்கொண்டு விரவான கூட்டணி ஒன்றை அமைக்க இருக்கிறோம். அதுதொடர்பான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அந்த கூட்டணியில் ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக  களமிறங்குவார்.

அத்துடன் நாடு வங்குராேத்து அடைந்திருந்த நிலையில் நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. ஆனால்  ரணில் விக்ரமசிங்க விழுந்திருந்த நாட்டை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும்போது, தற்போது நாட்டை பொறுப்பேற்க பலரும் முன்வர தயாராக இருக்கிறாார்கள். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்க 15பேர் வரை இருக்கிறார்கள். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை யாரால் மீள கட்டியெழுப்ப முடியும் என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

அத்துடன் நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அரச அதிகாரிகள் இதனைவிட பொறுப்புடன் செயற்பட வேண்டும். அவர்களின் அன்றாட கடமைகளை அவர்கள் இழுத்தடிப்பு செய்யாமல் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள முன்வரவேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு அரச அதிகாரிகளின் செயற்திறமையும் முக்கியமாகும். அதனால் நாட்டின் நிலைமையை உணர்ந்து அவர்கள் செயற்பட வேண்டும்.

மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்திய வங்கியே பொறுப்பாகும். இதனை நான் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகிறேன். நாட்டின் நிதி முகாமைத்துவம் இருப்பது அவர்களிடமாகும். அவர்கள் ஏனைய துறையினருக்கு விரல் நீட்டுகிறார்களே தவிர அவர்களின் பொறுப்பை செய்ய தவறினார்கள். இந்நிலையில் மத்திய வங்கி அதிகாரிகள் தங்களின் சம்பளத்தை பாரியளவில் அதிகரித்துக்கொண்டுள்ளனர். இது எந்த வகையிலும் நியாயம் இல்லை.  எமது காலத்தில் சாதாரண சம்பள அதிகரிப்புக்கு நாங்கள் அனுமதி வழங்கி இருந்தோம் என்றார்.