முன்னாள் பிரதமரும் மனைவியும் ஒன்றாக கருணைக் கொலை!

தீராத நோயினால் அவதி இருவரும் கரம்கோர்த்த நிலையில் உயிர்மாய்ப்பு

Kumarathasan Karthigesu-பாரிஸ்
1977-1982 ஆண்டு காலப்பகுதியில் நெதர்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தவர் ட்ரைஸ் வான் ஏஜிரி (Dries van Agt), அவரது மனைவி ஈஜெனி (Eugenie). இருவருக்கும் இப்போது 93 வயதாகிறது.
மீள முடியாத நோய்களுடன் போராடி வந்த இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய முடியாத நிலையில் சட்ட அனுமதியுடன் ஒன்றாக-ஒரே சமயத்தில் – உயிரை மாய்த்துக்கொண்டனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஐந்தாம் திகதி இருவரும் அவர்களது இல்லத்தில் கருணைக் கொலை (euthanized) செய்யப்பட்டனர் என்ற தகவலை அவர்களால் நிறுவப்பட்ட “ரைட்ஸ் ஃபோரம்” (the Rights Forum) என்ற தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

ட்ரைஸ் வான் அவரது கட்சியின் முதலாவது தலைவராகவும் பிரதமராகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாடுகளுக்கான ராஜதந்திரியாகவும் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். முதுமையில் கடந்த சில ஆண்டுகளாகப் பெரு மூளை வீக்க நோயினால்(brain hemorrhage) பாதிக்கப்பட்ட அவர் குணப்படுத்த முடியாத நோய்ப்படுக்கையில் காலத்தைக் கழித்து வந்தார். அவரது துணைவி ஈஜெனியும் முதுமைக் கால நோய்ப்படுக்கைக்குள்ளானார். மணவாழ்வில் ஒன்றாக 70 ஆண்டுகள் இணைந்திருந்த இருவரும் ஒன்றாகவே வாழ்வை முடித்துக் கொள்ளும் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது. அவர்களது விருப்பப்படி இருவரும் கரம் பற்றிய நிலையில் ஒன்றாக – ஒரே சமயத்தில்- கருணைக் கொலை செய்யப்பட்டனர்.

ட்ரைஸ் வான் அவர்களால் நிறுவப்பட்ட “ரைட்ஸ் ஃபோரம்” என்ற மனித உரிமைகள் காப்பு நிறுவனம் பாலஸ்தீன மக்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறது.

கருணைக் கொலை(euthanasia) மற்றும் மருத்துவ உதவியுடனான உயிர்மாய்ப்பு (assisted suicide) இரண்டையும் 2002 முதல் சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்ட நாடு நெதர்லாந்து. கருணைக் கொலைசெய்வோரது எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
வயோதிபத் தம்பதிகள் இவ்வாறு உயிர்மாய்த்துக் கொள்வது அரிது என்றாலும் அங்கு கடந்த 2020 ஆம் ஆண்டில் சுமார் 20 தம்பதிகள் இவ்வாறு ஒன்றாக உயிர்நீக்கும் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கருணைக் கொலை வேண்டிப் பலரும் விண்ணப்பித்தாலும் சட்டம் அதற்கான நிலைமைகளை வரையறை செய்கிறது. உதாரணமாக ஒருவர் நோயினால் தாங்க முடியாத வேதனையை அனுபவிப்பவராகவும் வலியிலிருந்து மீளவோ நிவாரணம் பெறவோ முடியாதவாறான நிலைமையில் இருப்பதும் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படவேண்டும். அத்துடன் இறக்கும் விருப்பத்தை ஒரு குறிப்பிட்ட காலம் வெளிப்படுத்தி வந்திருக்கவும் வேண்டும்.
ஐரோப்பாவின் சில நாடுகளில் மருத்துவ உதவியுடன் வாழ்வை முடித்துக்கொள்வதை அனுமதிக்கின்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பிரான்ஸிலும் விரைவில் இதற்கான சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">