ஒக். 7 ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பாரிஸில் அஞ்சலி.

படம் :ஏஎப்பி – – – – – –

Kumarathasan Karthigesu-பாரிஸ்

நூற்றாண்டின் மிகப்பெரிய யூதப் படுகொலை – மக்ரோன்

இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களுக்கும் தனியான நிகழ்வு நடக்கும்

கடந்த ஆண்டு ஒக்ரோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் எல்லை தாண்டி நடத்திய பெரும் தாக்குதலில் உயிரிழந்த பிரான்ஸின் குடிமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் உத்தியோகபூர்வ வைபவம் நேற்றுப் புதன்கிழமை பகல் பாரிஸ் நகரத்தில் நடைபெற்றுள்ளது.
பாரிஸ் நகரின் இன்வலிட் (Invalides) நினைவேந்தல் சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அரசுத் தலைவர் மக்ரோன் கலந்துகொண்டு உயிரிழந்த சிவிலியன்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இஸ்ரேல் மீது எதிர்பாராத சமயத்தில் நடத்தப்பட்ட பெரும் தாக்குதலில் ஆயிரத்து 160 க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
250 பேர்வரை பணயக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். ஸ்ரேலைப் பூர்வீகமாகக் கொண்ட உயிரிழந்தவர்களில் பிரெஞ்சுக் குடிமக்கள் 42 பேரும் அடங்குவர் . பணயக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட பிரெஞ்சுப் பொதுமக்களில் மூவர் இன்னமும் ஹமாஸின் பிடியில் உள்ளனர்.
பாரிஸ் அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய அதிபர் மக்ரோன், “எங்கள் நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப் பெரிய யூத எதிர்ப்புப் படுகொலை இது” என்று குறிப்பிட்டார்.

Photo :AFP

கம்பீரமான இன்வாலிட் நினைவுக் கட்டடத்தின் முற்றத்தில் இடம்பெற்ற நினைவேந்தலில், உயிரிழந்தவர்களது குடும்பத்தவர்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் கலை உலகத்தினர் உட்படப் பலர் சமூகமளித்திருந்தனர். உறவினர்களில் பலர் இந்த நிகழ்வுக்காகத் தனி விமானம் ஒன்றில் பாரிஸுக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டோரின் படங்கள் மற்றும் பெயர்களை அவர்கள் தாங்கிநின்றனர்.

இதேவேளை, காஸா மீது இஸ்ரேல் நடத்திவருகின்ற போரில் கொல்லப்பட்ட பிரெஞ்சுக் குடிமக்களுக்கும் இதே போன்ற அரச அஞ்சலி வைபவம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உறவினர்களும் இடது சாரி அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் முன்வைத்திருக்கின்றனர்.
மக்ரோன் தனது நேற்றைய அஞ்சலி உரையில் “பிரான்ஸின் பார்வையில் அனைத்து உயிர்களும் சமமானவை , விலைமதிப்பற்றவை” – என்றும் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், காஸாவில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த பிறிதொரு நேரம் ஒதுக்கப்படும் என்று அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பிரான்ஸின் பிரஜைகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் அவர்களது சரியான எண்ணிக்கை இன்னமும் தெரியவரவில்லை.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">