தமிழரசுக் கட்சி இரண்டாக – மூன்றாக உடைந்திருக்கிறது:  தர்மலிங்கம் சித்தார்த்தன்  தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சி இரண்டாக, மூன்றாக உடைந்திருப்பது ஒற்றுமை முயற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று புளொட்அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ். கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

ஆனால், அவர் இன்னமும் பதவியேற்கவில்லை. அதிலும் ஒரு சிக்கல் ஒன்று இப்போது போய்க்கொண்டிருக்கின்றது.அதாவது பதவியேற்பு வைபவம் அல்லது மாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, அதில் என்ன நடக்கும் என்று நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதன் பிறகுதான் தமிழரசுக் கட்சி கூட்டைப் பற்றி கதைக்கலாம் என அவர் தெரிவித்தார். அதைவிட முக்கியமான விடயமாக இப்போது தமிழரசுக் கட்சி இரண்டாக – மூன்றாக உடைந்திருப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. தமிழரசுக் கட்சியாக அதன் தலைவர் எடுக்கின்ற நடவடிக்கைகளை நிச்சயமாக மற்றைய குழு குழப்பிக் கொண்டே இருக்கும்.

ஆகவே, ஒற்றுமை முயற்சியிலே அது பாதகமான ஒரு பாதிப்பை கொடுக்கும் என்றுதான் நினைக்கிறேன். எனவே, முதலில் தமிழரசுக் கட்சியின் அந்த உடைவுகள் சரிக்கட்டப்பட வேண்டும். அவ்வாறு ஒன்றாகச் சீராக்கப்பட்டு அது ஒரு கட்சியாகத் திகழ வேண்டும். கடந்த காலங்களில் சம்பந்தர் அண்ணர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாலும் கசப்பான பல அனுபவங்கள் நடந்திருந்தன. இதன் காரணமாகவே கூட்டமைப்பு பதியப்பட வேண்டுமென அப்போதே நாங்கள் பலரும் கூறி வந்தோம். ஆனாலும், பதியப்படாததனாலேயே சிலர் கூட்டமைப்பை விட்டு வெளியே கூடச் சென்றார்கள். இப்போது கூட்டமைப்பாக – ஒற்றுமையாக – ஒரே அமைப்பாக இயங்க வேண்டும் என்றால் அது பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாற வேண்டும்.

அதாவது கூட்டிலே வருகின்ற அனைத்துக் கட்சிகளும் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கு என்று பொதுவான சின்னம் இருக்க வேண்டும். அது வீடாகவும் இருக்கலாம். தமிழரசுக் கட்சி வீட்டு சின்னத்தை விட்டுக் கொடுத்து அதைக் கூட்டமைப்பு சின்னமாகவும் மாற்ற முடியும். ஆகவே, இந்தப் பதிவு உள்ளிட்ட விடயங்கள் எல்லாம் நடந்தால்தான் கூட்டமைப்பு அர்த்தபுஷ்டியான கூட்டமைப்பாக அமையும் என்பதே எங்களுடைய அபிப்பிராயம்.இதனையே நான் மாத்திரமல்ல ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் பங்காளிகளாக இருக்கின்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் மிகத் தெளிவாக ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இப்படியான ஒரு நிலைப்பாட்டில்தான் நாங்கள் கூட்டமைப்பைப் பற்றி சிந்திக்க முடியும் என்று சொல்லியிருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.