மத்திய கிழக்கில் புதிய போர் முனை! ஹூதிகள் மீது அமெரிக்காவும் இங்கிலாந்தும் வான் தாக்குதல்!

செங்கடல் சம்பவங்களுக்கு மேற்கு நாடுகளது பதிலடி!!

Kumarathasan Karthigesu-பாரிஸ்

யேமனி நாட்டின் தலைநகரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற ஹூதி தீவிரவாதிகளது நிலைகள் மீது அமெரிக்க – பிரிட்டிஷ் படைகள் இரவுநேரத் திடீர் வான் தாக்குதலை நடத்தியிருக்கின்றன. ஈரானிய ஆதரவு பெற்ற பலம் பொருந்திய அந்த ஆயுத அமைப்பின் கட்டளைப் பீடம், வான் காப்பு மையம் மற்றும் ஆயுதக் களஞ்சியம் உட்பட 16 இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சேத விவரங்கள் தொடர்பான பக்கச்சார்பற்ற செய்திகள் இன்னமும் கிடைக்கவில்லை.
சர்வதேசக் கப்பல் போக்குவரத்து வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்காகவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.
தங்கள் மீதான தாக்குதலுக்குத் தகுந்த தண்டனையும் பதிலடியும் நிச்சயம் கிடைக்கும் என்று ஹூதி அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
செங்கடலில் பயணிக்கின்ற சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீது ஹுதி தீவிரவாதிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே அமெரிக்கா தலைமையிலான குண்டு வீச்சு நடத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப் படுகிறது.

ஹமாஸ் இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவை வெளியிட்டுவருகின்ற ஹூதி தீவிரவாதிகள், செங்கடல் ஊடாகப் பயணிக்கின்ற-இஸ்ரேலுடன் தொடர்புடைய – வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்படும் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கின்றனர். இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை கப்பல்கள் தாக்கப்பட்ட அல்லது கடத்தப்பட்ட 19 க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு அவர்களே பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுத இயக்கமாகிய ஹுதி இன அமைப்பு இவ்வாறு உலகின் மிக முக்கிய கப்பல் பாதையைத் தடுத்து அச்சுறுத்தியதை அடுத்து மிகப்பெரிய சர்வதேச வர்த்தகக் கப்பல் நிறுவனங்கள் பலவும் செங்கடல் ஊடான தங்களது கப்பல் போக்குவரத்துகளை நிறுத்தியிருக்கின்றன. அதனால் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.