அரச பேச்சாளராக பிரிஸ்கா நியமனம், நிதி, நீதி, உள்துறை பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றமில்லை.

ஊழல்களில் சிக்குண்ட ரசிடா டாத்திக்கும் பதவி.

Photo :அட்டால் அரசின் பேச்சாளர் பிரிஸ்கா தெவேனோ (Prisca Thevenot)

Kumarathasan Karthigesu-பாரிஸ்
கடந்த சில நாட்களாக எதிர்பார்க்கப்பட்டுவந்த புதிய அமைச்சர்களது பட்டியல் இன்று வெளியாகியிருக்கிறது. புதிய பிரதமர் கப்ரியேல் அட்டால் தனது அரசின் 14 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை விவரத்தை வெளியிட்டிருக்கிறார்.
உள்துறை, நிதி, நீதி, பாதுகாப்பு போன்ற பொறுப்பு மிக்க முக்கிய அமைச்சுக்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. உள்துறை அமைச்சராக ஜெரால்ட் டாமன்னாவும் (Gérald Darmanin) நிதி அமைச்சராக புறுனோ லு மேயரும். (Bruno Le Maire) நீதி அமைச்சராக எரிக் டுப்பொண்ட் – மோரெட்டியும் (Éric Dupond-Moretti), ஆயுதப்படைகளுக்கான (பாதுகாப்பு) அமைச்சராக செபாஸ்டியன் லுகோர்னுவும் (Sébastien Lecornu) பதவிகளில் நீடிக்கின்றனர்.
வெளிவிவகார அமைச்சு கேத்தரின் கொலென்னாவிடம்(Catherine Colonna) இருந்து பறிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு ஸ்ரேபன் செஜுர்னியிடம் (Stéphane Séjourné) ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விவகார அமைச்சராகவும் விளங்குகின்ற இவரே பிரதமர் கப்ரியேல் அட்டாலின் ஒருபாலினத் துணையாகக் குறிப்பிடப்படுகிறார்.
ஒலிவியே வேரனிடம் (Olivier Véran) இருந்துவந்த அரசாங்கப் பேச்சாளர் பதவி 38 வயதான பிரிஸ்கா தெவேனோவிடம் (Prisca Thevenot) வழங்கப்பட்டிருக்கிறது. பிரதமர் கப்ரியேல் அட்டாலின் நெருங்கிய சிநேகிதியான அவர், இதற்கு முன்னர் கல்வி அமைச்சில் இரண்டாவது பொறுப்பு மிக்க பதவியில் இருந்து வந்தவர். மக்ரோனின் கட்சியின் சார்பில் Hauts-de-Seine தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியவர். மொறீஸியஸ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்.
கப்ரியேல் அட்டால் வகித்துவந்த தேசிய கல்வி அமைச்சுப் பதவி அமெலி ஊடியா-காஸ்டெராவிடம் (Amélie Oudéa-Castéra) ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
அவர் கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகாரம், ஒலிம்பிக் போட்டிகள் ஆகிய முக்கிய பல துறைகளை உள்ளடக்கிய சுப்பர் அமைச்சுப் பதவியை வகிக்கிறார்.
பிரதமர் கப்ரியேல் அட்டாலின் அமைச்சரவையில் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் நியமனமாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியிருந்த முன்னாள் நீதி அமைச்சர் ரசிடா டாதிக்கு (Rachida Dati) கலாசார அமைச்சுப் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. வலதுசாரி எதிர்க்கட்சியான ரிப்பப்ளிக்கன் கட்சியைச் சேர்ந்த அவர், பாரிஸ் ஏழாவது நிர்வாகப் பிரிவின் (7ème arrondissement) மேயராகப் பதவி வகித்து வருகின்றார். முன்னாள் அதிபர் சார்க்கோசியின் ஆட்சியில் நீதி அமைச்சராக விளங்கியவர். ஜரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக 2009-2010-2011 காலப்பகுதியில் ரெனோல்ட்(Renault) நிறுவனத்திடமிருந்து ஒன்பது லட்சம் ஈரோக்கள் நிதியை முறைகேடாக அல்லது செல்வாக்கின் நிமித்தம் பெறும் நன்கொடையாகப் பெற்றிருந்தார் என்று அவர் மீது நீதிபதி ஒருவரால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மக்ரோனின் அரசில் அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருப்பதை அடுத்து ரிப்பப்ளிக்கன் கட்சியில் இருந்து அவர் வெளியேறியிருக்கின்றார்.
அதிபர் மக்ரோன் தனது இரண்டாவது ஐந்தாண்டு பதவிக்காலத்தின் இறுதி மூன்று வருட காலத்துக்குப் பிரதமராக கப்ரியேல் அட்டாலை நியமித்திருப்பது தெரிந்ததே. இதற்கு முன்னர் மூவரைப் பிரதமர்களாகக் கொண்டு மூன்று அமைச்சரவை மாற்றங்களைச் செய்திருந்தார். இது நான்காவது மாற்றம் ஆகும்.14 பேரை உள்ளடக்கிய இன்றைய புதிய அமைச்சரவையில் இடம்பெறுவோரில் மொத்தம் எட்டுப் பேர் வலதுசாரிக் கட்சி ஊடாக அரசியலுக்கு வந்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்ற விமர்சகர்கள் இது அட்டாலின் அரசை “வலதுசாரி அரசாங்கம்” என்று விமர்சித்துள்ளனர்.
⚫அட்டால் அமைச்சரவையின் முழு விவரமும் ஒரே பார்வையில் :(பிரெஞ்சு மொழியில்)
  • Premier ministre: Gabriel Attal

  • Ministre de l’Economie, des Finances et de la Souveraineté industrielle et Numérique: Bruno Le Maire

  • Ministre de l’Intérieur et des Outre-mer: Gérald Darmanin

  • Ministre du Travail, de la Santé et des Solidarités: Catherine Vautrin

  • Ministre de l’Éducation nationale, de la Jeunesse, des Sports et des Jeux Olympiques et Paralympiques: Amélie Oudéa-Castéra

  • Ministre de l’Agriculture et de la Souveraineté alimentaire: Marc Fesneau

  • Ministre de la Culture: Rachida Dati

  • Ministre des Armées: Sébastien Lecornu

  • Garde des Sceaux, ministre de la Justice: Éric Dupond-Moretti

  • Ministre de l’Europe et des Affaires étrangères: Stéphane Séjourné

  • Ministre de la Transition écologique et de la Cohésion des territoires: Christophe Béchu

  • Ministre de l’Enseignement supérieur et de la Recherche: Sylvie Retailleau

  • Chargé du Renouveau démocratique, porte-parole du Gouvernement: Prisca Thevenot

  • Chargé des Relations avec le Parlement: Marie Lebec

  • Chargée de l’Egalité entre les femmes et les hommes et de la Lutte contre les discriminations: Aurore Bergé

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">