ஜனாதிபதி யாழ் விஜயம் : 8 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் விஜயமாக எதிர்வரும் நான்காம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில், யாழ்ப்பாணம் பொலிஸாரினால் செவ்வாய்க்கிழமை  வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு 04ம் திகதி முதல் 07ம் திகதி வரை வடக்கில் தங்கியிருந்து பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிரான போராட்டங்களை தடுக்கும் வகையில் தடை கட்டளை கோரி பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இது தொடர்பில் நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில், இன்று புதன்கிழமை தங்கள் தரப்பு நிலைப்பாட்டினைமுன்வைக்குமார் நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு கட்டளையிட்டுள்ளது. அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.