திருகோணமலை எண்ணெய் குதங்களை தனியார் நிறுவனத்துக்கு  வழங்க அரசாங்கம் தீர்மானம்.

திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் குதங்களில் 61 எண்ணெய் குதங்களை திருகோணமலை பெற்றோலிய முனைய தனியார் நிறுவனத்துக்கு 50 வருடகாலத்திற்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2022.01.03ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு குறித்த எண்ணெய் குதங்களை வழங்க கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.திருகோணமலை சீனக்குடா துறைமுகத்தில் உள்ள 99 எண்ணெய்த் குதங்களை மேற்புற தாங்கி திடல் கொண்டுள்ளது. அவற்றில் 61 குதங்களை திருகோணமலை பெற்றோலிய முனைய தனியார் கம்பனிக்கு 50 வருடகாலத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவையில் வழங்கப்பட்ட அங்கீகாரத்துக்கு எதிராக கடுமையான பிரசாங்கள் கடந்தகாலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது குறித்த தீர்மானத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டு அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியவளக் கற்கை உள்ளிட்ட அடிப்படை படிமுறைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சாத்தியவளக் கற்கை மூலம் இக்கருத்திட்டம் 16 ஆண்டுகளில் 07 கட்டங்களாக அபிவிருத்தி செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், அதன் முதலாவது கட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாகப் பயனுறு வாய்ந்த 09 குதங்களை மறுசீரமைப்புச் செய்வதற்கும், கிட்டத்தட்ட 1.75 கிலோமீற்றர் தூர வீதியைப் புனரமைப்பதற்கும், ஏற்புடைய ஏனைய வசதிகளை நிர்மாணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிர்மாணித்தல், நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல்  எனும் வணிக மாதிரியைப் பின்பற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, முதலாவது கட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்கு உத்தேச அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக, குறித்த பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.