18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஜனவரி 31ஆம் திகதிக்குள் வரி இலக்கத்தை பெற கட்டாய சட்டம்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஜனவரி 31ஆம் திகதிக்குள் வரி இலக்கத்தை (TIN) அல்லது வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது.

அதை எப்படி எளிதாகப் பெறுவது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற கேள்விகள் பலருக்கும் இருக்கின்றது.

அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி, இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் வரி இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, அந்த காலத்தை பெப்ரவரி முதலாம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.

நடப்பு கணக்கு தொடங்கும் போதும், கட்டிட திட்ட அனுமதி பெறுவதிலும், வாகனங்கள் பதிவு செய்யும்போதும், உரிமம் புதுப்பிக்கும் போதும், நில உரிமையை பதிவு செய்யும்போதும் பெப்ரவரி முதலாம் திகதி வரி இலக்கம் கட்டாயமாகும்.

எவ்வாறாயினும், வரி இலக்கத்தை (TIN) பெறுவதற்கு பதிவு செய்வதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால் மட்டுமே வரி விதிக்கப்படும் நபராக மாறுகிறார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோர் அடையாள எண்ணை எப்படிப் பெறுவது என்பதுதான் இப்போது பலருக்கும் இருக்கும் பிரச்சனை. அதற்கு பல வழிகள் உள்ளன.

அவற்றில் ஒன்று உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்குச் செல்வது அல்லது அதன் பிராந்திய அலுவலகங்களிலிருந்து வரி இலக்கத்தை பெற்றுக்கொள்வது ஆகும்.

அதற்கு தேசிய அடையாள அட்டை மட்டுமே தேவை.

இல்லையெனில், விண்ணப்பப் படிவத்தை ஒன்லைனில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உள்நாட்டு வருவாய் துறைக்கு அஞ்சல் மூலம் அனுப்புவதன் மூலம் வரி இலக்கத்தைப் பெற முடியும்.

உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் இணையதளத்திற்குச் சென்று ஒன்லைனில் வரி இலக்கத்தைப் பதிவு செய்வதே எளிதான வழியாகும்.

தொடர்புடைய படிவத்தை பூர்த்தி செய்யும் போது உங்கள் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மட்டுமே தேவைப்படும்.

தேசிய அடையாள அட்டையில் உள்ள முகவரியிலிருந்து தற்போதைய முகவரி வேறுபட்டால், கிராம அலுவலர் சான்றிதழ் தேவை. ஒன்லைனில் பதிவு செய்யும் போது ஐந்து வேலை நாட்களுக்குள் வரி இலக்கம் பெறப்படும்.

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெறாத நபர்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என்ற சட்ட ஏற்பாடு இருந்தாலும், அது தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.