ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின்  பேச்சுவார்த்தை  இடைநிறுத்தம்.

நல்லிணக்கம் தொடர்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை ஈடுபடவிருந்த நிலையில் குறித்த பேச்சுவார்த்தை திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், பிற்பகல் 3 மணிக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் எம்.பிக்களை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஜனாதிபதி சந்தித்துப் கலந்துரையாடவிருந்தார்.

குறித்த பேச்சுவார்த்தையில் நல்லிணக்கம், அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையிலேயே பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் ஜனாதிபதியுடனான இந்தக் கலந்துரையாடல் இன்று நடைபெறமாட்டாது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவித்தலை நேற்று கடிதம் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி செயலகம் அனுப்பிவைத்துள்ளது.