எண்ணெய்யைக் கைவிடுவதற்கு உலக மாநாட்டில் இணக்கம்.

200 நாடுகள் தீர்மானம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

கடந்த நூற்றாண்டுகளில் உலகளாவிய அரசியலிலும் போர்களிலும் பொருளாதாரத்திலும் ஆக்கங்களிலும் அழிவுகளிலும் மிகுந்த செல்வாக்குச் செலுத்தி வந்த-வருகின்ற – பெற்றோலிய எரிபொருள்களின் (fossil fuels) பாவனைக்கு முடிவுகட்டுவதற்கான தொடக்கப் புள்ளியை மனித குலம் எட்டியிருக்கிறது.

உலகைப் பேரழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்ற கனிம எரிபொருள்களின் பாவனையை கைவிடுவதை நோக்கிய “மாற்றத்தைத் தொடங்குவது” (transition” towards the abandonment of fossil fuels) என்று டுபாயில் நடைபெற்று முடிந்த உலக பருவநிலை மாநாட்டின் (COP 28)இறுதி அறிக்கைப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் டுபாயில் நடைபெற்றுவந்த ஐ. நா. பருவநிலை மாநாட்டின் முடிவில் இன்று புதன்கிழமை இறுதிப் பிரகடனத்தை வெளியிட்ட COP 28 இன் தலைவர் சுல்தான் அல்-ஜாபர் (Sultan al-Jaber), “நாம் எல்லோரும் ஒன்றாகக் கூடி உலகத்தைச் சரியான திசைக்குத் திருப்பியிருக்கிறோம்” என்று பலத்த கரகோஷத்தின் மத்தியில் அறிவித்தார்.

உலகில் இவ்வாறு கனிம எரிபொருள்கள் அல்லது புதைபடிவ எரிபொருள்களாகிய பெற்றோலிய எண்ணெய்யைக் கைவிடுவதற்கான இணக்கம் ஒன்று நாடுகளிடையே எட்டப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். சுமார் இருநூறு நாடுகளிடையே முன்னொருபோதும் நிகழ்ந்திராத இந்த இணக்கம் சுமார் இரண்டு வார கால விவாதங்களுக்குப் பிறகு எட்டப்பட்டிருக்கிறது.

இயற்கைப் பேரனர்த்தங்களால் இழப்புகளையும் சேதங்களையும் சந்திக்கின்ற வறிய நாடுகளுக்கு உதவுவதற்கான உலக நிதியம் (“loss and damage fund) – 2050 ஆம் ஆண்டில் உலக அணு சக்தியை மூன்று மடங்காக அதிகரித்தல் (Tripling nuclear) – ஆகிய தீர்மானங்களும் மாநாட்டில் எட்டப்பட்டிருக்கின்றன.